Ad Widget

ஐ.நா.சபையின் 20 பரிந்துரைகளில் எதனையும் நீக்கும் பேச்சுக்கு இடமில்லை – எம்.ஏ.சுமந்திரன்

ஐ.நா.சபையின் இலங்கைக்கான 20 பரிந்துரைகளில் எவ்விடயத்தையும் நீக்க வேண்டுமென்ற பேச்சுக்கே இடமில்லை.அவைஒவ்வொன்றையும் எவ்வாறு நிறைவேற்ற முடியுமென்ற ஆலோசனைகளையே கட்சிகள் முன்வைக்க வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளதாக யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.

ஐ.நா.சபையின் தீர்மானம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியால் கூட்டப்பட்ட இரண்டாவது சர்வகட்சி மகாநாட்டில் பேசப்பட்ட விடயம் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் ஒக்டோபர் மாதத்தில் கூட்டப்பட்ட முதலாவது சர்வகட்சி மகா நாட்டுக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியால் நாம் அழைக்கப்பட்டிருந்தோம். எழுத்து மூல ஆலோசனைகளை ஒவ்வொரு கட்சியும் சமர்ப்பிக்க வேண்டுமென முதலாவது மகா நாட்டில் ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப அனைத்து தரப்பினரது அபிப்பிராயங்களும் தீர்மானங்களும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் வாசித்துக் காட்டப்பட்டது.

அந்த அறிக்கையில் சில கட்சி தலைவர்கள் ஐ.நா.சபையின் தீர்மானத்துக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்கள். மற்றும் சிலர் ஐ.நா.சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் இன்னும் சிலர் சிலவற்றை மாத்திரம் அந்த தீர்மானத்தில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும். சிலவற்றை நடைமுறைப்படுத்த கூடாதென்றும் கூறியுள்ளதாக, ஆளுநர் வாசித்துக்காட்டினார்.

அதன் பின் எதை நடைமுறைப்படுத்தலாம் எதை கைவிடவேண்டுமென்ற அபிப்பிராயங்களை கூறினார்கள். அவ்வேளையில் நான் குறுக்கிட்டு எனது கருத்தைத் தெரிவிக்கையில், நாம் பேசவேண்டிய விடயத்துக்கு ஒரு அடிப்படை இருக்க வேண்டும். ஐ.நா.சபையில் எடுக்கப்பட்ட தீர்மானமானது வேறு ஒரு நாட்டினாலோ, இன்னுமொரு நபரினாலோ நிறைவேற்றப்பட்ட தீர்மானமல்ல.

இலங்கை அரசாங்கமே, முன்மொழிந்து நிறைவேற்றிய தீர்மானமாகும். ஆகவே தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் இலங்கை அரசாங்கத்தை சார்ந்தது. வேறு ஒருவருடைய தீர்மானமாக இருப்பின் இதுபற்றி நாம் கருத்து முரண்படலாம். எனவே இலங்கை அரசாங்கத்தால் முன்மொழிந்த விடயத்தை இலங்கை அரசே நிராகரிக்க முடியாது.

மேற்படி ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தமாகும். அந்த ஒப்பந்தத்தை முறித்தால் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும்.

மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதன் காரணமாக ஏற்பட்ட பின் விளைவுகளை நாம் அறிவோம். நிறைவேற்ற தவறின் அதைவிட மோசமான பின் விளைவுகளை இலங்கை அரசாங்கம் காணவேண்டிய நிலை ஏற்படும்.

ஐ.நா.சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமென்ற வகையிலும் பார்க்கப்படலாம். ஏனெனில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது தமிழ் மக்கள் சார்பில் நாங்களும் பங்குபற்றியிருக்கிறோம். நிறைவேற்றப்பட்ட விடயங்கள் திருப்தி இல்லாமல் இருந்த போதிலும் இது முன்னேறிச் செல்வதற்கான முதலாவது படிக்கல் என்ற வகையில் கூட்டமைப்பினராகிய நாம் வரவேற்று அமுல்படுத்த எமது உதவியை வழங்குகிறோம்.

இத்தகைய சூழ்நிலையில் அது நீக்கப்பட வேண்டும். இவையில்லாமல் ஆக்கப்பட வேண்டுமென்ற கருத்தும் அணுகுமுறையும் முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட வேண்டிய விடயம். அரசாங்கம் இவ்வாறான விடயத்தை செய்ய முற்படுமாக இருந்தால் இது விடயத்தில் கூட்டமைப்பு எவ்வித பங்களிப்பையும் ஆற்ற முடியாமல் போய்விடும். விலக வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படலாம்

Related Posts