Ad Widget

ஐ.நா கூட்டத்தொடருக்கு முன்னரே இராணுவ வீரர்கள் கைது!- ஜயந்த சமரவீர

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே யுத்தத்தை வெற்றிக்கொண்ட இராணுவ வீரர்கள் கைது செய்யப்படும் நிலைமை காணப்படுவதனால், அதனை தடுக்கும் செயற்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜயந்த சமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா கூட்டத்தொடரில், இராணுவத்தினால் யுத்தக்குற்றம் இடம்பெற்றதாக அப்போதைய வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட மங்கள சமரவீர ஏற்றுக்கொண்டார்.

அதற்கமைய யுத்தக்குற்றத்துடன் தொடர்புடைய இராணுவ வீரர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான கால அவகாசத்தை பேரவை வழங்கியிருந்தது.

குறித்த காலஅவகாசம் எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமையால், அன்றைய தினம் கைது செய்யப்பட வேண்டிய இராணுவ வீரர்களின் பெயர்கள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்படலாம்.

ஆனால், அக்கூட்டத்தொடருக்கு முன்னரே, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொடவுக்கு எதிராக நீதிமன்றத்தில் காணப்படும் வழக்கை காரணம் காட்டி அரசாங்கம் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்கின்றது.

மேலும், யுத்தக்குற்றத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படும் 59 பேருக்கு எதிராக மனித உரிமை பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆகையால், இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அனைத்து மக்களுக்கும் நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுத்த இராணுவ வீரர்களை பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

Related Posts