Ad Widget

ஐ.நா அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நகர்வு! – சம்பந்தன் அறிவிப்பு

ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பான அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.

தமிழரக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்றுக் கொழும்பில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை – மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்து ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் சர்வதேச விசாரணை, உள்ளகப்பொறிமுறை எனப் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் வெளிவருகின்றமை தொடர்பாக மத்திய குழு உறுப்பினர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,

“இலங்கையில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் விசாரணைகள் நிறைவுற்று அது தொடர்பிலான அறிக்கை வெளியிடப்படவுள்ளது. உண்மையிலேயே சர்வதேசத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து தெளிவு நிலையற்றவர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். சர்வதேச விசாரணை இடம்பெற்று அதன் அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னரே அதில் குறிப்பிடப்பட்டுள்ள சிபார்சுகளை கவனத்தில் கொண்டு எமது அடுத்து கட்ட நகர்வுகள் குறித்து இறுதிசெய்யமுடியும். அதன் முன்னதாக எந்தவிமான அனுமானங்களையும் கூறமுடியாது.

எனினும், இங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் விடயங்கள் தொடர்பாக எவ்விதமான செயற்பாடுகளை மேற்கொள்வதென்றாலும் சர்வதேசத்தின் முழுமையான பங்களிப்பு தேவை என்பது பொதுவான விடயமாகும். அரசியல் தீர்வுக்கான கருமங்களை முன்னெடுக்கும்போது சர்வதேசத்தை புறந்தள்ளி எம்மால் எவ்விதமான முன்னகர்வுகளையும் மேற்கொள்ளமுடியாது. ஆகவே நாம் சர்வதேசத்தை அனுசரித்து செல்லவேண்டிய தேவையுள்ளது” – என்றார்.

Related Posts