Ad Widget

ஐ.நா அறிக்கை பிற்போடப்பட்டது முழுமையான ஏமாற்றமல்ல ; புதியதொரு ஒளிக்கீற்று என்கிறார் சுமந்திரன்

sumanஐ.நா அறிக்கை பிற்போடப்பட்டதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்கள்  இனப்படுகொலை தொடர்பில் கண்ணால் கண்ட சாட்சிகளை முழுமையாக முன்வைக்க முன்வர வேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுத்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் .   இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான ஐ.நா அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆணையாளரினால் செப்ரெம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.

[Photo : Online Uthayan ]
இது குறித்து பலரும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வரும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  நிலையப்பாடு குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று பிற்பகல் யாழ். நகர் விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.    அவர் மேலும்  தெரிவிக்கையில்,   இலங்கையின் புதிய ஆட்சி மாற்றம் நாங்கள் எதிர்பார்த்தது போல ஏற்பட்டுள்ளது. அது அனைவருக்கும் சந்தோசம்.    இந்த ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் புதிய அரசு மார்ச் மாதம் வெளியிடப்படவிருந்த இனப்படுகொலை தொடர்பான ஐ.நா அறிக்கையினை பிற்போடுமாறு கோரியிருந்தது.

அந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.நா உயர்ஸ்தானிகருக்கும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கும் எமது நிலைப்பாடுகளை கடிதம் மூலம் அனுப்பி இருந்தோம்.   குறித்த கடிதத்தில் நீதிக்காக மக்கள்  காத்து இருப்பதனையும் உண்மை அறியப்பட வேண்டும் என்றும்  உண்மையை மூடி மறைப்பதன் ஊடாக நல்லிணக்கம் ஏற்படாது எனவும் நாங்கள் தெளிவுபடுத்தியிருந்தோம்.   இம்மாதம் ஆரம்பத்தில் ஜெனீவாவிற்கு சென்று பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தோம்.அதன்போது ஆணையாளர் எமது கொள்கைகளையே தானும் கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அத்துடன் குறித்த அறிக்கை வெளிவரும் போது திடகாத்திரம், பலம், அங்கலாய்ப்பு ,விடுதலை கொடுக்கும் அறிக்கையாக இருக்க வேண்டும். அத்துடன்  நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் அறிக்கையாகவும் இருக்க வேண்டும்.   அதற்கமைய விடயங்களை ஆராய்ந்து தான் ஒரு தீர்மானத்தை எடுப்பதாக எமக்கு தெரிவித்திருந்தார்.  இந்தநிலையில் நேற்றைய தினம்  அறிக்கை பிற்போடப்படுகின்றது என்று ஐ.நா ஆணையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்  ஐ.நா அறிக்கை பிற்போடப்பட்டது ஏமாற்றமே. எங்களுக்கும்  எங்களை விட நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் ஏமாற்றம். எனினும்  இந்த ஏமாற்றத்திலும் கூட தமிழ் மக்களுக்கு புதியதொரு ஒளிக்கீற்று ஏற்பட்டுள்ளது. எனவே இது முழுமையான ஏமாற்றம் அல்ல.   இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான அறிக்கை மார்ச் மாதத்தில் வெளியாகும் அறிக்கையை விட  முழுமையானதாக வர வாய்ப்புள்ளது.

இதனை ஆணையாளரே தெரிவித்துள்ளார் .எனவே தமிழ் மக்களுடைய பங்களிப்பு முக்கியம்.   ஏற்கனவே திரட்டப்பட்ட தரவுகளை விட மேலதிகமான தரவுகள் பலருக்குத் தெரியும் எனவே  நீங்கள்  அச்சத்தினை விடுத்து வாய்திறந்து பேச முன்வாருங்கள்  நியாயம் கிடைக்க வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts