Ad Widget

ஐ.நாவின் வழிகாட்டலிலேயே போர்க்குற்ற விசாரணை!- பான் கீ மூனின் பேச்சாளர் பதிலடி

இலங்கையில் இடம்பெற்ற போரின் போதான சம்பவங்கள் குறித்து நம்பத்தகுந்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நாவின் வழிகாட்டுதல்களுக்கு அமைய நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பது இன்றியமையாத விடயம் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ – மூனின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்கப்போவது இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மதிப்பீடு செய்ய முடியும் எனவும், எனினும், நியாயமான முறையில் விசாரணைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கு இருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை வாதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் நீதித்துறையில் நம்பிக்கை இருக்கின்றது எனவும், அதனை வலுப்படுத்த வேண்டியுள்ளதோடு, அதன் சுயாதீனத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts