Ad Widget

ஐ.நாவின் புதிய ஆணையாளரை அரசு சந்திப்பதால் விசாரணைகளில் மாற்றம் ஏற்படப்போவதில்லை!

“ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளரை அரச தரப்பினர் தனிப்பட்ட முறையில் சந்திப்பதால் இலங்கை மீதான விசாரணையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது” –

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

suresh

எனவே, நியாயமான தீர்வு ஒன்றை எட்டக்கூடிய சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இலங்கை அரசு இடமளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நவநீதம்பிள்ளையின் கோட்பாட்டை பின்பற்றி இலங்கை விடயத்தைக் கையாள்வதாக ஐ.நாவின் புதிய மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் ஜெனீவாவில் தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய ஆணையாளரின் கன்னி உரையின் மூலமாக தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை சரியான எல்லையை அடையும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பக்கச்சார்பாக – நேர்மையற்று நடந்தார் என்று பொய்க் குற்றச்சாட்டுக்களை அடுக்கிவந்த இலங்கை அரசுக்கு புதிய ஆணையாளரின் கன்னி உரை தக்கபதிலடியாக அமைந்துள்ளது என்றும் சுரேஷ் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

Related Posts