Ad Widget

ஐ.நாவின் ஆதரவை கோரவேண்டியுள்ளது – சுரேஷ்

SURESHவடமாகாணத்தை பொறுத்தவரையில் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகவே உள்ளது. உறவுகளை கேட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலேந்திரன் ஜெயகுமாரி மற்றும் அவரது 13 வயது மகள் விபூசிக்கா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.

வாக்களிக்க சென்றவேளையில் காணாமல் போன ஆசிரியர் எலும்பு கூடாக மீட்கப்பட்டுள்ளார் இவ்வாறான நிலையில் தமிழர்களின் பாதுகாப்புக்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவை தேடவேண்டியுள்ளது என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வியாழக்கிழமை (13) கைதுசெய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயகுமாரி மற்றும் அவரது 13 வயது மகள் விபூசிக்கா தொடர்பில் விளக்கமளிக்கும் மக்கள் கண்காணிப்பு குழவின் பத்திரிக்கையாளர் மாநாடு கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்றது.

இம் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இராணுவத்தினரிடம் ஒப்படைத்த தமது மகனை காட்டுமாறு பல போராட்டங்களை நடத்தியதுடன் கடந்த பொதுநலவாய மாநாட்டின்போது பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரொன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடாத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட தாய் மற்றும் மகள் இருவரும் வெள்ளிக்கிழமை நொச்சி தர்மபுரம் பகுதியில் அவர்களது வீட்டில்வைத்து இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டனர், தாய் தற்போது பூஸா சிறையிலும் மகள் சிறுவர் நன்னடத்தை நிலையத்திலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெள்ளிக்கிழமை வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர் இதன்போது வாக்குமூலம் அளித்த அந்த தாய் தானும் மகளும் தங்களது வீட்டில் மதியஉணவு சமைத்துக்கொண்டு இருக்கையில் கறுப்பு நிற உடையணிந்த ஒருவர் வீட்டின் மதிலின் மேல் பாய்ந்து வீட்டுக்குள் வந்ததாகவும் தாங்கள் பயத்தில் வீட்டைவிட்டு வீதிக்கு ஓடோடிவந்தபோது வீதியோரத்தில் பொலிஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததையும் வாகனத்தில் பொலிஸ் சீருடையில் சிலரும் சிவிலுடையில் சிலரும் நின்றதாகவும் பொலிஸார் தங்களை விசாரிக்கையில் இரு பொலிஸார் வீட்டுக்குள் சென்றதாகவும் அதன் பின்னர் வீட்டுக்குள் வெடிச்சத்தம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் கைதுசெய்ய காரணமான கறுப்பு சீருடை அணிந்தவர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை இந்த மர்ம நபர் சுட்டதில் பொலிஸ் அதிகாரிக்கு கை மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்த நபர் ஏன் நெஞ்சில் சுடவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருகின்றது. துப்பாக்கிச் சூட்டின் பின்னர் சுமார் 500 இற்குமேற்பட்ட இராணுவத்தினரால் அந்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தியும் இந்த நபரை கைது செய்ய முடியவில்லை இதன்முலம் அரசாங்கம் வடக்கில் மனித உரிமை மீறல் நடப்பதை உறுதி செய்துள்ளது என்றார்.

இதுமட்டுமல்லாமல் வவுனியாவில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் கார்த்திகேசு நிரூபன் கடந்த மாகாண சபை தேர்தலின்போது வாக்களிப்பதற்காக வவுனியா பஸ்தரிப்பிடத்தில் தனது உந்துருளியை நிறுத்திவிட்டு யாழ்ப்பாணம் சென்றவர் காணாமல் போயிருந்ததாக பொலிஸில் அவரது உறவினர்களால் முறையிடப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன் மாங்குளம் பகுதியில் ஏ-9 வீதிக்கருகில்லுள்ள காணியிலிருந்து அவர் எலும்புக்கூடாக மீட்கப்பட்டார்’ என பிரேமசந்திரன் கூறினார்.

Related Posts