Ad Widget

ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிக்கும்வரை ஓயமாட்டோம் – ஒபாமா

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை அடியோடு அழிக்கும்வரை ஓயமாட்டோம் என அமெரிக்க அதிபர் ஒபாமா சூளுரைத்துள்ளார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்ட ரிஸ்வான் ஃபரூக்கும், அவரது பாகிஸ்தான் மனைவி தஷ்ஃபீன் மாலிக்கும் இரவு விருந்து நிகழ்ச்சியொன்றில் கடந்த வாரம் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தை பயங்கரவாதச் சம்பவமாக அறிவித்து, அந்த நாட்டு புனலாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா தனது “ஓவல்’ அலுவலகத்திலிருந்து நாட்டு மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார்.

கடந்த 7 ஆண்டுகளில் தனது அலுவலகத்திலிருந்து 3-ஆவது முறையாக அவர் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

அந்த உரையில் அவர் கூறியதாவது:

அமெரிக்காவுக்குத் தீங்கு விளைவிக்கும் ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாதிகளை அடியோடு ஒழிப்போம்.
ஐ.எஸ். பயங்கரவாதத்துக்கு அடிபணிவதற்குப் பதிலாக, கூடுதல் பலத்தைத் திரட்டி அவர்களை அழிக்கும் வரை ஓயமாட்டோம்.

எனினும் அதற்காக இராக், சிரியாவுக்கு தரைப்படையினரை அனுப்ப மாட்டோம். அந்தப் பகுதிகளுக்கு அமெரிக்க ராணுவத்தினர் அனுப்பப்பட வேண்டும், இராக்கில் முன்பு செய்ததுபோல் பயங்கரவாதச் செயல்கள் மூலம் ஆயிரக்கணக்கில் அமெரிக்க வீரர்களை கொன்று குவிக்க வேண்டும் என்பதுதான் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் எதிர்பார்ப்பு. அந்த நோக்கம் நிறைவேற இடம் தர மாட்டோம்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான உள்ளூர் ஆயுதப் படையினருக்கு ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையிலான தற்போதைய போர் வியூகம் தொடரும்.

கலிஃபோர்னியா மாகாணம், சான் பெர்னாடினோ நகரில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் பயங்கரவாதத் தாக்குதலே ஆகும். அமெரிக்க இஸ்லாமியர்களின் மத உணர்வுகளில் நஞ்சைக் கலந்து நிகழ்த்தப்படும் இதுபோன்ற புதிய வகை பயங்கரவாதத்தையும் அமெரிக்கா எதிர்கொள்ளும்.

ஐ.எஸ். பயங்கரவாதிகள், இஸ்லாம் மதக் கோட்பாடுகளை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்பது உண்மைதான். எனினும், இஸ்லாம் மத போதனைகளை அவர்கள் தவறாகப் பயன்படுத்தி, இஸ்லாமியர் மனதில் பயங்கரவாத சிந்தனைகளை விதைப்பதற்கு எதிராக, முஸ்லிம் சமூகத்தினர் எதிர்த்துப் போராட வேண்டும் என்றார் ஒபாமா.

Related Posts