Ad Widget

ஐஸ்கிறீம் கேட்ட 5 வயது மகளை தாக்கிய தாய் கைது

தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தில் வைத்து தனது 5 வயது மகளை கொடூரமான முறையில் தாக்கிய தாயொருவரை பொலிஸார் இன்று திங்கட்கிழமை (01) கைது செய்தனர்.

இளவாலை, பனிப்புலம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட தாய், செல்வச்சந்திநி ஆலய வளாகத்தில் தனது 5 வயது மகளுடன் கற்பூரம் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை தனது தாயிடம் ஐஸ்கிறீம் வாங்கித் தருமாறு குறித்த 5 வயது சிறுமி கோரியுள்ளார். இதனையடுத்து அவர் தன் மகளை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால், அச்சிறுமியின் மூக்கு மற்றும் வாயால் இரத்தம் வடிந்துள்ளது.

இதனை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக செல்வச்சந்நிதி உபபொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த பெண்ணை கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மேற்படி தாய் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி தனது 5 வயது மகளையும் ஒன்றரை வயது மகனையும் கிணற்றுக்குள் போட்டு கொலை செய்ய முற்பட்டுள்ளார் என்றும் அயலவர்களின் முயற்சியால் அவ்விரு சிறுவர்களும் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.

தொடர்ந்து, இளவாலை பொலிஸார் மேற்படி தாயை கைது செய்து, யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையில், மேற்படி பெண்ணை நீதிமன்றக் காவலில் வைத்து மனநல சிகிச்சையளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன், அந்த தாயின் 5 வயது மகளை கைதடி சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைத்துப் பராமரிக்கவும் ஒன்றரை வயது மகனை பாட்டியிடம் கையளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

நீதிமன்ற காவலில் மனநல சிகிச்சை பெற்ற அத் தாய், நன்னடத்தை அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதுடன் அவரது குழந்தைகளும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையிலேயே அவர், தனது 5 வயது மகளை இன்று கடுமையாகத் தாக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts