Ad Widget

ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக பீடங்களின் மாணவர் ஒன்றியம் அறிக்கை

போருக்கு பிந்திய சூழலில் இடம்பெற்றுள்ள இக்கொலைகள் யாழ்ப் பல்கலைகழக சமூகத்தையும் அனைத்து தமிழ் சமூகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக பல்கலைக்கழக பீடங்களின் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

uni

இக்கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் முழுமையாக நடைபெற்று சம்பவத்துடன் தொடர்பானவர்கள் தண்டிக்கப்படுவது இயல்பு நிலை மீளுருவாக்கத்திற்கு மிகவும் அத்தியாவசியமானதாகும்.

ஆரம்பத்தில் பொலிஸார் இந்த கொலைகளை விபத்தாக காட்ட முனைந்தமை பொலிஸாரால் பக்கச்சார்பின்றிய விசாரணைகள் இடம்பெறுமா? என்ற கேள்வியை முன்னிறுத்தியுள்ளது.

இந்த விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் என்ற விருப்பம் அதிகாரத்திலுள்ளவர்களிடம் இல்லாதுவிடின் கடந்த காலத்தை போன்றே இத்தகைய அநீதிகளுக்கு தீர்வு கிடைக்காது போய்விடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சட்டப்பிரதிநிதிகளது முழுமையான பங்குபற்றுதலோடு பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்த வேண்டும்.

கொலைகள் விபத்தாக காட்ட முனைந்தமைக்கான பொலிஸாரின் சட்டத்திற்கு முரணான முயற்சியை தேசிய பொலிஸ் ஆணைக்குழு முழுமையாக விசாரிக்க வேண்டும்.

மனித உரிமை ஆணைக்குழு, உள்ளுர், சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களை இவ்வழக்கின் நீதி விசாரணையை முழுமையாக அவதானிக்க வேண்டும்.

விசாரணைகள் காலதாமதமின்றி முடிவுறுத்தபட்டு ஒரு மாத காலத்திற்குள் குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக யாழ் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவேண்டும்.

இந்த மாணவர்களின் குடும்பங்களிற்கு முழுமையான அரசால் வழங்கப்படும் இழப்பீடும் அக்குடும்பத்தின் இயல்பு வாழ்க்கைக்கு தேவைப்படும் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்யும் மாதாந்த கொடுப்பனவும் வழங்கப்படவேண்டும் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Related Posts