Ad Widget

“ஐநா அறிக்கையை இலங்கை உள்ளக விசாரணை பயன்படுத்தும்”

இலங்கை போரின்போது நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையரின் விசாரணை அறிக்கையின் கருத்துக்களை இலங்கை அரசு உருவாக்கவிருக்கும் உள்ளக புலனாய்வு மற்றும் நீதிக்கட்டமைப்பு பயன்படுத்தும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஐநாவின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.

mangala_samaraweera_geneva

நேற்று திங்கட்கிழமையன்று ஜெனீவாவில் துவங்கிய ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையத்தின் இருபத்தி எட்டாவது அமர்வில் பேசிய இலங்கை அமைச்சர், இலங்கை அரசு உள்ளக புலன்விசாரணை மற்றும் நீதிக்கட்டமைபுக்களை உருவாக்கவிருப்பதாக கூறினார். அந்த அமைப்புக்கள், ஐநா மன்ற மனித உரிமை ஆணையரின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை கணக்கில் எடுத்துச் செயற்படும் என்று மங்கள சமரவீர தெரிவித்திருக்கிறார்.

இலங்கை அரசு உருவாக்கவிருக்கும் உள்ளக புலன்விசாரணை மற்றும் நீதிக்கட்டமைப்புகளின் தன்மை மற்றும் அவை செயற்படும் முறைகள் குறித்து இலங்கை அரசு ஏற்கனவே விரிவான விவாதங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த மங்கள சமரவீர, இதற்குத் தேவையான சட்டமாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

2009 ஆம் ஆண்டில் அப்போதைய இலங்கை அரசு, “பயங்கரவாதத்தை” முடிவுக்கு கொண்டுவந்ததாகவும், அது அவசியமானது என்றும் வாதிட்ட மங்கள சமரவீர, அப்படி செய்யப்பட்டதால்தான் இலங்கைக்குள் மனித உரிமைகளும், நீடிக்கத்தக்க அனைவருக்குமான வளர்ச்சியும் சாத்தியமாகும் சூழல் தோன்றியதாகவும் தெரிவித்தார்.

அதேசமயம், அதற்கு ஒரு விலை கொடுக்கப்பட்டதாக கூறிய இலங்கை அமைச்சர், முந்தைய அரசாங்கமானது வெற்றி மமதையுடனும், யாரும் தன்னை எதுவும் செய்யமுடியாது என்கிற மனோபாவத்துடனும் நடந்து கொண்டதால்தான் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் இலங்கையில் உருவாகவில்லை என்றும், நாட்டின் மனித உரிமைகள் நிலவரம் மேம்படவில்லை என்றும் மங்கள் சமரவீர கூறினார்.

ஆனால் ஜனவரி 8 ஆம் தேதியன்று இலங்கையில் நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜனாதிபதித்தேர்தலில் முந்தைய ஆட்சி தோற்கடிக்கப்பட்டு புதிய ஆட்சி அமைந்திருக்கும் சூழலானது இலங்கைக்குள் மனித உரிமைகள் மேம்படவும், நல்லிணக்கம் உருவாகவும் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும், தற்போதைய இலங்கை அரசு அந்த முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாகாவும் தெரிவித்தார் மங்கள சமரவீர.

முதல்கட்டமாக நீண்டநாட்களாக காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் பிரச்சனையை இலங்கை அரசு மீளாய்வு செய்து வருவதாக தெரிவித்தார். காணாமல் போனவர்களின் பட்டியலை இறுதி செய்வதற்காக இலங்கை அரசு செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து செயற்பட்டுவருவதாகவும் அவர் ஐநா கூட்டத்தில் கூறினார்.

இலங்கையின் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு முன்னெடுப்புக்கள் ஏற்கெனவே துவங்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அமைச்சர், முந்தைய அரசால் அமைக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையம் மோசமான மனித உரிமை மீறல்கள் நடந்ததாக அடையாளம் கண்ட சம்பவங்களில் மேலதிக புலனாய்வு மற்றும் சட்ட ரீதியிலான மேல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.

இலங்கைக்குள் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த தமது அரசாங்கம் விரும்புவதாக தெரிவித்த மங்கள சமரவீர, இலங்கைக்குள் ஏற்பட வேண்டிய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கட்டமைப்பும், முன்னெடுப்புக்களும் இலங்கை அரசின் சுயமான செயற்பாடாக இருப்பதே சரியான வழி என்றும் வாதாடினார்.

அந்த அணுகுமுறையே அவை வெற்றிபெறுவதற்கான ஒரே வழி என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இலங்கைக்குள் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான தகமை, ஆளணி மற்றும் திறமைகள் தமக்கு இருப்பதாக தெரிவித்த மங்கள சமரவீர, இலங்கையின் உள்ளக பொறிமுறைகளுக்குத் தேவையான ஆலோசனையையும், கட்டமைப்பு வசதிகளையும், உதவிகளையும் சர்வதேச சமூகத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்குத் இலங்கை அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் மனித உரிமைகளை மேம்படுத்தவும், நல்லிணக்கத்தை தோற்றுவிக்கும் நோக்கத்துடனும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் மற்றும் அவரது கீழ் செயற்படும் பல்வேறு மனித உரிமைகளுக்கான அமைப்புக்கள் மற்றும் அவற்றின் நிபுணர்களுடன் தான் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாக தெரிவித்த மங்கள சமரவீர, இலங்கையின் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு தென் ஆப்ரிக்க அரசின் குழுவினரின் உதவியையும் இலங்கை அரசு நாடியிருப்பதாகவும் கூறினார். ஏற்கனவே ஐநா பிரதிநிதியும், தென் ஆப்ரிக்க குழுவினரும் இலங்கைக்கு வந்திருப்பதை சுட்டிக்காட்டிய மங்கள சமரவீர, இத்தகைய ஒத்துழைப்புக்கள் தொடரும் என்றும் கூறினார்.

Related Posts