Ad Widget

ஐநாவுக்கான இலங்கை அரசின் ஆலோசனைகள் வெளியிடப்படும் – ரணில்

செப்டம்பர் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாக அது தொடர்பிலான இலங்கை அரசின் ஆலோசனைகள் வெளியிடப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருக்கிறார்.

வட இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்துவரும் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மூலம் உருவாக்கப்பட்ட நல்லாட்சியை வலுப்படுத்துவதற்காக ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வலுவான நிரந்தரமான நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்குவதற்கு வடபகுதி மக்கள் தமக்கு ஆணை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியிருக்கின்றார்.

முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்த ரணில் விக்கிரமசிங்க, அங்கு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றியபோது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும், தென்னாப்பிரிக்காவைப் பின்பற்றி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பத்தாயிரம் வீடுகளையும், வவுனியா மாவட்டத்தில் 12 ஆயிரம் வீடுகளையும் அமைப்பதுடன் இளைஞர் மற்றும் யுவதிகளின் வேலைவாய்ப்புக்காக மிகப்பெரிய அளவிலான திட்டம் ஒற்றைச் செயற்படுத்தவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.

மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய இடங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related Posts