Ad Widget

ஐநாவில் பணியாற்றவுள்ள சிறிலங்காப் படையினருக்கு காங்கேசன்துறையில் பயிற்சி!

ஐநா அமைதிகாக்கும் படையணியில் பணியாற்றவுள்ள சிறிலங்காப் படையினரின் அணியொன்றுக்கு காங்கேசன்துறையில் ஒத்திகைப் பயிற்சி நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சியானது எதிர்வரும் 27ஆம் நாள் காங்கேசன்துறையில் ஆரம்பித்து 9 நாட்கள் 1166 கி.மீ பயணம் செய்து, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சூரியவெவவில் நிறைவடையவுள்ளது.

மாலியில் பணியாற்றும் ஐநாவின் சண்டை வாகனத் தொடரணியில் பணியாற்றவுள்ள சிறிலங்காவின் 15 அதிகாரிகள் மற்றும் 185 படையினருக்கே இந்த ஒத்திகைப் பயிற்சி நடைபெறவுள்ளது.

மாலியில் உள்ள களநிலைச் சவால்களை எதிர்கொள்வது குறித்த தயார்படுத்தல்களை மேற்கொள்ளவே இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பயிற்சியில் கவசப்படை, இயந்திர காலாட்படை, மற்றும் ஏனைய உதவிப்படைப் பிரிவுகளுடன் 68 வாகனங்களும் ஈடுபடவுள்ளன.

போர் விநியோக நடைமுறைகள், கட்டளை மற்றும் தலைமைத்துவம், அவசரகாலத் திட்டங்கள், தொடரணி நடவடிக்கைகள், அவசர முடிவெடுத்தல், வெடிபொருட்களைச் செயலிழக்கச் செய்தல், தொலைத்தொடர்புப் பராமரிப்பு மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts