Ad Widget

ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம்!: வெளிநாட்டு நீதிபதிகள் என்ற பேச்சுக்கு இடமில்லை

ஐக்கிய நாடுகள் சபை இலங்கை தொடர்பாக 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் கீழான 30/1க்கு உட்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணையை அப்பொழுது சமர்ப்பித்த அனுசரணை நாடுகள் இந்த கால அவகாசத்திற்கு உடன்பட்டிருப்பதாக பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.

இந்த பிரேரணைக்கு அப்பொழுது அனுசரணை வழங்கிய அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் காலஅவகாசம் வழங்குவதற்கு ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது உடன்பாடு தெரிவித்துள்ளன. இலங்கைக்கான ஐக்கியநாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க ஜெனீவாவில் இந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அதிகாரியின் அறிக்கையை பயன்படுத்தி குறுகிய நோக்கத்தை கொண்டு செயற்படும் சிலர் நாட்டு மக்களை தவறான வழியில் இட்டுச்செல்வதற்கு முயற்சிக்கின்றனர். மக்கள் இவர்களிடம் ஏமாந்துவிடக்கூடாது. உண்மை நிலையை புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஜக்கியநாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் அதிகாரி சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாகவும் ஜெனீவாவில் தற்பொழுது இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளிப்பதற்கு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது.

இந்த செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

மனித உரிமை பேரவையின் ஆணையாளர் ஐக்கியநாடுகள் சபையின் ஒரு அதிகாரி மாத்திரமே இவ்வாறான அதிகாரிகளினால் அறிக்கைகள் சமர்ப்பிக்க முடியும்.

அவை எந்தவகையிலும் ஒரு நாட்டின் இறைமை மீது விசேடமாக தாக்கத்தை ஏற்படுத்தாது.

இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையும் அவ்வாறானதே. 2015ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ஐக்கியநாடுகள் சபையில் முன்னெடுக்கப்பட்ட பிரேரணையில் 30 /1க்கு உட்பட்ட ரெக்னிக்கல் றோலிற்கு உட்பட்ட விடயங்களே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தற்பொழுது உள்ள விடயமாகும்.

இதற்குட்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தற்காக இதுவரையில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை பிரேரணைக்கு அனுசரணை வழங்கிய நாடுகள் பாராட்டியுள்ளன. முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காகவே 2 வருட கால நீடிப்புக்கு உடன்பட்டிருப்பதாக மேலும் ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.

விசேடமாக பிரிட்டன் அமெரிக்கா முதல் முக்கிய நாடுகளும் கனடா அயர்லாந்து சீனா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளும் கால நீடிப்பிற்கு உடன்பட்டுள்ளன.

ஹைபிறைட் நீதிமன்றம் – வெளிநாட்டு நீதிபதிகள் :

2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பிரேரணையில் இந்த நீதிமன்றம் குறித்தோ வெளிநாட்டு நீதிபதிகள் குறித்தோ எந்த விடயமும் குறிப்பிடப்படவில்லை. அதனால் வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மனித உரிமை பேரவையின் அதிகாரி சமர்ப்பித்துள்ள அறிக்கையில் மாத்திரமே இது குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அரசாங்கம் உடன்படவும் இல்லை ஏற்றுக்கொள்ளவுமில்லை. நாட்டின் இறைமைக்குட்பட்ட விடயங்களிலேயே பொதுவாக நாடுகள் உடன்படுவதும் வழமை . இலங்கையும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இறைமையுடன் தொடர்புடைய எந்தவொரு விடயத்திற்கும் உடன்படப்போவதுமில்லை ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts