ஏ-9 வீதியில் கோர விபத்து: மோட்டார் சைக்கிளும் பார ஊர்தியும் மோதியதில் இரு இளைஞர்கள் பலி!

கைதடி பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக ஏ-9 வீதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த பார ஊர்தியும் (லொறி) நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தின் கோரத் தன்மையால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த சாவகச்சேரிப் பொலிசார் உடனடியாக விபத்து இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கிடையில், விபத்துக்கான சரியான காரணம் மற்றும் உயிரிழந்த இளைஞர்களின் அடையாளம் குறித்த மேலதிக விசாரணைகளைச் சாவகச்சேரிப் பொலிசார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts