Ad Widget

ஏழு மாதங்களுக்குள் மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்படும் – சுவாமிநாதன்

வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு 7 மாதங்களுக்குள் மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

swamy

வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையில் சனிக்கிழமை (28) நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் அவர் கூறுகையில்,

வடமாகாண மக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் என்பதனை நான் ஏற்று கொள்கின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சி கொடுத்த வாக்குகளை காற்றிலே பறக்க விட்டுவிட்டார்கள் என்று சிலர் கூறுகின்றனர். ஒருபோதும் நாம் அவ்வாறு செய்யமாட்டோம். தமிழ்மக்கள் இழந்தவற்றில் பெற்றுக்கொடுக்கக்கூடிய அனைத்தையும் ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து பெற்று கொடுக்கவே முயற்சிகின்றனர்.

எமது அரசாங்கம் கூறியது போல மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துவோம். முதல் கட்டமாக 3 கிழமைக்குள் 1000 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.

வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை இன்று சனிக்கிழமை (28) இராணுவ அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டேன். அவை எவ்வளவு அழகான இடம். சிறந்த விவசாய பூமியாக காணப்படுகின்றது. அவை அனைத்தையும் தமிழ் மக்களுக்கு கையளிக்க எமது அரசாங்கம் இராணுவ தரப்புக்களின் ஒத்துழைப்புக்களுடன் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இராணுவ தேவைக்கு என அத்தாட்சிப்படுத்தப்படாத காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு கையளிக்க நடவடிக்கைளை மேற்கொள்கின்றோம். இன்னமும் 6 தொடக்கம் 7 மாதங்களுக்கு அவை படிப்படியாக விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்படும். தமிழ் மக்கள் ஒத்துழைத்து வாழ வேண்டும். தமிழ் மக்களுக்குள் பிரச்சனைகள் எதிர்ப்புக்கள் இருந்தால் தமிழ் மக்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்தார்.

Related Posts