Ad Widget

ஏனைய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை யாழ்ப்பாணத்தில் உரிமை மாற்ற முடியும்!!

“யாழ்ப்பாணம் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு முற்பதிவுகளை செய்து தமக்கான சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்” இவ்வாறு மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள பிரதி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் தெரிவித்ததாவது;

தற்சமயம் எமது அலுவலகத்தினால் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் புதிய மோட்டார் சைக்கிள்களிற்கான உரிமை மாற்றம் (வடமாகாணத்திற்குள் உள்ளேயுள்ள மோட்டார் சைக்கிள்களின் உரிமை மாற்றம்) என்பவற்றிற்கு மேலதிகமாக எமது தலைமைக் காரியாலயத்தினால் ஏனைய வாகனங்களையும் எமது யாழ்ப்பாணம் மாவட்ட நிர்வாக பிரதேச எல்லைக்குட்பட்ட உரிமை மாற்றம் செய்துகொள்ளக்கூடிய வகையில் அதிகாரம் வழங்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குள் வசிக்கின்ற மக்கள் தங்களுடைய வாகனங்களிற்கான உரிமை மாற்ற சான்றிதழ்களிற்கான விண்ணப்பங்களை எமது அலுவலகத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் குறிப்பிட்ட காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

குறிப்பாக பிரதேச செயலகங்களிற்கோ அல்லது கொழும்பிற்கோ செல்ல வேண்டிய தேவையில்லை. இந்த வகையில் இந்த சேவைகள் எமது மாவட்ட அலுவலகத்துக்கு பரவலாக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு வாகனங்களை உரிமைமாற்றம் செய்ய விரும்புபவர்களிற்கு எமது அலுவலகத்தினால் இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

தற்போதைய கோரோனா வைரஸ் பரவல் காரணமாக இவ்வாறான முற்பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது மக்களை கூடியளவிற்கு நெருக்கமாகக் கூடியிருக்க அனுமதிக்காத முறையில் நாங்கள் முற்பதிவுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

யாழ்ப்பாணம் மாவட்ட எல்லைக்குள் வாகனங்களை உரிமை மாற்றம் செய்ய விரும்புபவர்கள் 0706354155, 0706354156 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு முற்பதிவுகளை செய்து வழங்கப்படும் விவரங்களுக்கு அமைய உரிய தினத்தில் வந்து தமது உரிமை மாற்ற விண்ணப்பங்களை சமர்ப்பிக்கமுடியும்.

இதன் மூலம் தமக்கு ஏற்படும் நெருக்கடிகளையும் மற்றவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளையும் தவிர்த்துக் கொள்ள முடியும் – என்றார்.

Related Posts