Ad Widget

ஏனைய மக்களைப் போன்று வடக்கு மக்களுக்கும் உரிமை! காணிகள் மீளளிக்கப்படும் – பிரதமர்

வடக்கு மக்களின் காணிகளை மீளப் பெற்றுக்கொடுத்து அவர்களை மீள்குடியேற்றவும், ஏனைய பகுதிகளிலுள்ள மக்களைப்போல உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாட்டில் சட்டம், ஒழுங்கை உறுதிப்படுத்தும் சமூக முறைமையை ஏற்படுத்துவதுடன், மூன்று ஆண்டுகளுக்குள் சிறந்த பொருளாதார சமூகத்தை உருவாக்கும் செயற்றிட்டத்தை முன்வைத்து, வரலாற்றில் இதுவரை இடம்பெறாத அபிவிருத்தியை இலங்கையில் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தப் பயணத்தில் அனைவரும் கைகோக்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

மேலும், தற்போது தம்மை குற்றஞ்சாட்டி, விமர்சிப்பவர்கள் எதிர்காலத்தில் தம்முடன் இணைந்துகொள்வர் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

புதுவருடத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் நேற்று வாழ்த்துத் தெரிவித்து ஆற்றிய விசேட உரையின்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சபாநாயர் கரு ஜயசூரிய, ஐ.தே.கவின் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர, ராஜித சேனாரட்ன, ரவூப் ஹக்கீம், டி.எம்.சுவாமிநாதன், லக்ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக்க உள்ளிட்ட பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட பிரதமர்,

“மக்கள் வழங்கிய ஆணைக்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அதனூடாக எமது நாட்டைப் புதிய பாதையில் கொண்டுசெல்லும் பயணம் ஆரம்பிக்கப்பட்டது. நல்லாட்சி ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைய இன்னும் நான்கு (மூன்று) நாட்கள் உள்ளன. இந்தக் காலப்பகுதிக்குள் நாட்டில் சுதந்திரத்தை ஏற்படுத்தி, புதிய அரசமைப்பொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், நாட்டில் முதன்முறையாக ஜனாதிபதி ஒருவர் தனது நிறைவேற்று அதிகாரங்களை நீக்க தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையாளரின் தலைமையில் தேர்தலை நடத்தினோம். நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் பிரதான இரு கட்சிகளும் இணைந்து தேசிய அரசை உருவாக்கினோம்” என்று தெரிவித்தார்.

உலகில் நாம் முகங்கொடுக்கவேண்டியேற்பட்ட மனித உரிமை பிரச்சினைகளில் வெற்றிபெற்று, உலகை எம்முடன் இணைத்துக்கொண்டு, இந்த நாட்டில் உரிமைகளை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதை ஞாபகமூட்டியதுடன், வடக்கில் துன்பங்களை அனுபவித்த மக்களின், அவர்கள் வாழ்ந்த காணிகளை மீளப்பெற்றுக்கொடுக்க, மீள்குடியேற்ற ஏனைய பகுதிகளிலுள்ள மக்களைப்போல உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கை எடுப்போம் என்றும் குறிப்பிட்டார்.

“இந்த வருடத்தில் நாம் இன்னுமோர் புதிய பயணம் செல்கின்றோம். அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் ஆரம்பித்து, பொருளாதார சமூக செயற்பாட்டை ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம். மக்களின் வருமானத்தை அதிகரிக்க, இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க, நல்ல பொருளாதாரத்தைப் பெற்றுக்கொடுக்க, உலகில் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற, வறுமையை ஒழிக்க, சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கல்வி முறைமையை ஏற்படுத்த, நாட்டில் சட்டம், ஒழுங்கை உறுதிப்படுத்தும் சமூக முறைமையை உருவாக்க எதிர்பார்க்கின்றோம்” என்றும் தெரிவித்தார்.

“அந்த வேலைத்திட்டத்தைச் செய்ய நாட்டிலுள்ள அனைவரும் எம்முடன் இணையவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றேன். இந்தப் பயணத்தில் நாட்டு மக்களும், உலகமும் இணையும். இதற்கமைய மூன்று வருடத்துக்குள் சமூக பொருளாதார அபிவிருத்தி செயற்றிட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாம் முன்வைப்போம்” என்றும் குறிப்பிட்டார்.

“நாம் 2015இல் முழு நாட்டுக்காகவும், அனைவருக்காகவும் புதிய பயணத்தை ஆரம்பித்தோம். இன்று நாம் செல்லும் பயணம் உங்கள் வீட்டுக்குத் தாக்கம் செலுத்தும் பயணமாகும். உங்களுக்கு அபிவிருத்தியை ஏற்படுத்தும் பயணம். எமது பயணத்தை நிறுத்த எதிர்பார்க்கும் சிலர் விமர்சனம் செய்ய, குற்றஞ்சாட்ட எதிர்பார்ப்பர். விமர்சனம் செய்யும், குற்றஞ்சாட்டும் அனைவரும் காலம் செல்லும்போது எம்முடன் இணைவர்.

இந்த நாட்டின் வரலாற்றில் இடம்பெறாத பாரிய அபிவிருத்தி மேல் மாகாணம் முதல் திருகோணமலை, அம்பாந்தோட்டை முதல் யாழ்ப்பாணம் வரை ஏற்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம். இந்தப் பயணத்தில் இணைய அனைவருக்கும் மீண்டும் அழைப்புவிடுப்பதுடன், அனைவருக்கும் சுப வாழ்வு கிட்ட பிரார்த்திக்கின்றேன்” என்றார்.

Related Posts