Ad Widget

ஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையான தமிழ் அரசியல் கைதி கோரிக்கை!

எங்களது விடுதலைக்காக குரல் கொடுத்து வந்த மக்களுக்கும், எமது விடுதலைக்காக செயற்பட்டவர்களுக்கும், எம் விடுதலையை சாத்தியமாக்கியவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக சூரியகாந்தி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “இன்றைய தினம் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட எம்மை போன்ற உறவுகள் சிலர் இன்னமும் சிறைகளில் உள்ளனர். அவர்களையும் மிக விரைவில் விடுவிக்க வேண்டும் என கோருகிறோம்.

பலர் செய்யாத குற்றங்களுக்காக நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுவித்து, அவர்களையும் சமூகத்துடன் வாழ வைக்க வேண்டும்.“ என கேட்டுக்கொண்டுள்ளார்.

பொசனை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் மூலம் 16 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட 93 பேர் நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சூரியகாந்தி ஜெயச்சந்திரன் என்பவரும் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் விடுதலையாகி குடும்பத்துடன் இணைந்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இவர் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலையே நேற்றைய தினம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையாகியுள்ளார்.

Related Posts