Ad Widget

எழுதுமட்டுவாழில் கால்நடை மருத்துவ நடமாடும் சேவை நடைபெற்றது

வடக்கு கால்நடை அமைச்சின் ஏற்பாட்டில் கால்நடை மருத்துவ நடமாடும் சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை (04.06.2017)எழுதுமட்டுவாழில் நடைபெற்றது.எழுதுமட்டுவாழ் ஸ்ரீ கணேச வித்தியாசாலையில்இடம்பெற்ற இச்சேவையை வடக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

யாழ்மாவட்டத்தில் வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் 16 வைத்திய நிலையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. கால்நடை வளர்ப்பாளர்கள் இம் மருத்துவ நிலையங்களுக்குக் கால்நடைகளைக் கொண்டுச் செல்வதில்சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு வடக்கு கால்நடை அமைச்சு கடந்த ஆண்டில் இருந்து கால்நடை மருத்துவ நடமாடும் சேவையை நடாத்தி வருகிறது. இதன்போது பண்ணையாளர்களை நோக்கி வைத்திய சேவைகள் நகர்வதால் கூடுதலான பண்ணையாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதன் ஒரு கட்டமாகவே இன்று மீள் குடியேற்றப்பட்ட எழுதுமட்டுவாழில் கால்நடை மருத்துவ நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளது.

இதன்போது கால்நடைகளுக்கான மருந்துகள், கனியுப்புக்கலவைகள் பண்ணையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சைகளும் இடம்பெற்றுள்ளன. கால்நடைவளர்ப்பாளர்களின் முறைப்பாடுகளின் அடிப்படையில் வீடுகளுக்குச் சென்று சிகிச்சைகள் வழங்கப்பட்டதோடு, எழுதுமட்டுவாழில் இயங்கிவரும் பெரியளவிலான பாற்பண்ணையையும் மருத்துவ அதிகாரிகள் குழு சென்று பார்வையிட்டுள்ளது.

இந்நடமாடும் சேவையின் தொடக்க நிகழ்ச்சியில் வடக்குமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன், விவசாய அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன்,கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர்சி.வசீகரன், உதவிப்பணிப்பாளர் வக்சலா அமிர்தலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts