Ad Widget

எல்லை நிர்ணயம் அவசியமில்லை, பிரதிநிதித்துவங்களில் மாற்றம் வேண்டாம்! – கூட்டமைப்பு

வடக்கு, கிழக்கில் காணப்படும் பிரநிதித்துவங்கள் உட்பட சிறுபான்மை பிரதிநிதித்துவங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் மறுசீரமைப்பு அமையவேண்டும். அத்துடன் அடுத்த பத்தாண்டுகளுக்குள் எல்லை நிர்ணயம் அவசியம் இல்லை என்பதை அரசிடம் தொடர்ந்தும் வலியுறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

suresh

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி தவிர்ந்த கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.

மேற்படி தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கையில் –

இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் திருத்த யோசனைத் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக அக்கட்சியில் 260 நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்கள் இடம்பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதில் தொகுதிவாரி முறையில் 165 உறுப்பினர்களும், விகிதாசார முறையில் 65 உறுப்பினர்களும், தேசிய பட்டியல் மூலம் 30 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள யோசனையில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்கள் 240இற்கு மேற்படாத வகையில் அமைய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, சிறுபான்மை மற்றும் சிறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய யோசனை ஒன்றை முன்மொழிவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இவ்வாறான நிலையில் சிறுபான்மை மக்களை பாதிக்கும் எந்தவொரு தேர்தல் மறுசீரமைப்பு முறைமைக்கும் கூட்டமைப்பு துணைபோகாது. அதேநேரம், வடக்கு, கிழக்கு பகுதியில் காணப்பட்ட அசாதாரண நிலைமைகளினால் பல்வேறு உயிரிழப்புகளும் இடப்பெயர்வுகள் இடம்பெற்றுள்ள நிலையில், எல்லை மீள் நிர்ணயம் செய்யப்படும் பட்சத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்களில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகவுள்ளன. ஆகவே, வடக்கு – கிழக்கு மக்களின் தற்போதைய பிரதிநிதித்துவங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாது அவற்றை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும்.

அத்துடன் அடுத்த பத்தாண்டுகளுக்கு எல்லை மீள்நிர்ணயம் செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும் அரசிடம் தொடர்ந்தும் வலியுறுத்துவதற்கு நாம் இந்தக் கலந்துரையாடலில் தீர்மானித்துள்ளோம் – என்றார்.

இதேவேளை, 19ஆவது திருத்தச் சட்டத்திற்கான ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதுடன் நாடாளுமன்றத்தில் அதனை அங்கீகரிப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதிலும் எவ்விதமான மாற்று யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

Related Posts