Ad Widget

எரிபொருள் விலையை உடனடியாக அதிகரியுங்கள் – அதிகரிக்கும் அழுத்தம்

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் குறைந்த விலையில் எரிபொருள் வழங்க முடியாது. எனவே பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஐ.ஒ.சி நிறுவனம் ஆகியன அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.

அரசாங்கத்தின் அனுமதியை பெற்று எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற தேவைப்பாடு இல்லாத போதிலும் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்காக காத்திருப்பதாக இலங்கை ஐ.ஒ.சி நிறுவனம் கூறியுள்ளது.

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் மக்களின் எதிர்ப்பு மற்றும் அதிருப்தி என்னவென்பது அண்மைக்காலமாக வெளிப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது எரிபொருள் விலையை அதிகரிக்கும் கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் தொடர்ந்தும் எரிப்பொருள் நட்டத்தில் இறக்குமதி செய்ய முடியாது, இதனால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனதிற்கும், இலங்கை ஐ.ஒ.சி நிறுவனத்திற்கும் பாரிய நட்டம் ஏற்படப்போவதாகவும் அவர்கள் தொடர்ச்சியாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அது குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க கூறுகையில்,

எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என நாம் தெரிவித்துள்ளோம், கடந்த இரண்டு வாரகாலமாக இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, தற்போதுள்ள நிலையில் நடைமுறையில் உள்ள விலையில் எரிபொருள் வழங்க முடியாது.

அவ்வாறு வழங்கினால் பல கோடி ரூபாய்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு நட்டம் ஏற்படும். ஆனால் இந்த சூழ்நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்காது என அரசாங்கம் கூறியுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கோ, நிதி அமைச்சருக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ உலக சந்தையின் விலையை முகாமைத்துவம் செய்ய முடியாது.ஆகவே இலங்கையில் விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும்,

இல்லையேல் எமக்கு ஏதேனும் நிவாரணங்களை வழங்க வேண்டும்.இரண்டும் இல்லாது தொடர்ந்தும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை முன்னெடுத்து முடியாது. இதனை சகலரும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

இலங்கை ஐ.ஒ.சி நிறுவனத்தின் தலைவர் நிறைவேற்று பணிப்பாளர் மனோஜ் குப்தா இது குறித்து கூறுகையில், தற்போதுள்ள நிலையில் உலக சந்தையில் கச்சாய் எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. அவ்வாறான நிலையில் எரிபொருளை அதிக விலையில் இறக்குமதி செய்து குறைந்த விலையில் வழங்கினால் பாரிய நட்டம் ஏற்படும்.

இப்போதும் டீசல் மற்றும் பெற்றோல் ஒரு லிட்டருக்கு 30 ரூபாவால் நட்டம் ஏற்படுவதாகவும், எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை என்ற போதிலும் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை உன்னிப்பாக கவனிப்பதாகவும், எரிபொருள் விலையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் இலங்கை ஐ.ஒ.சி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து வினவியபோது அவர் கூறுகையில், எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற தொடர்ச்சியான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் என்னுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து காரணிகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சரவையிலும், ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான சந்திப்பிலும் இந்த காரணிகளை எடுத்துக்கூறியுள்ளதுடன் இதற்கு மேலும் எம்மால் நிலைமைகளை சமாளிக்க முடியாது. எனவே ஏதேனும் நிவாரண ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம். அரசாங்கம் இது குறித்து ஆராய்ந்து வருகின்றது. நிவாரணங்கள் வழங்கினால் அல்லது ஓமான் மற்றும் இந்தியாவின் எரிபொருளுக்கான கடன் கிடைத்தால் நிலைமைகளை சமாளிக்க முடியும், இல்லையேல் விலை அதிகரிப்பை மேற்கொள்ள நேரிடும் என்றார்.

Related Posts