Ad Widget

எம்மை நாமே ஆள எமக்கு அரசு இடமளிக்க வேண்டும். வடமாகாண முதலமைச்சர் வலியுறுத்தல்

அரசாங்கம் நேசக்கரம் காட்டுவது போல் காட்டி எம்மை வஞ்சித்து தனது நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த முயலக்கூடாது. மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்க அரசாங்கம் முன்வர வேண்டும். எம்மை நாமே ஆள எமக்கு அரசாங்கம் இடமளிக்கவேண்டும். தமது கரத்தை பலமாக்குவதற்கு எம்மை வலுவிழக்கச் செய்ய அரசாங்கமானது முயலக்கூடாது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன்தெரிவித்தார்.

mavai-vicky

வடமராட்சி தெற்கு, மேற்கு, பிரதேச சபையின் உள்ளூராட்சி விழாவும், விருந்தினர் கௌரவிப்பும் பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர். பொ. வியாகேசு தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

இங்கு அவர் மேலும் கூறியதாவது : –

இன்று உங்கள் பிரதேச சபையின் உள்ளூராட்சி விழா கொண்டாடப்படுகின்றது. அதிகாரங்களை சிறிய மக்கட் கூட்டங்களுக்குப் பகிர்ந்தளித்து அவர்களின் கலாச்சாரம் வாழ்க்கை முறை, வளங்கள், சுபாவங்கள், மனோநிலை போன்றவற்றின் அடிப்படையில் உள்ளூர் ஆட்சியொன்றினை அமைத்து அவ்வாட்சியின் அதிகார வரம்பினுள் ஆவன செய்ய உதவுவதற்கே உள்ளூராட்சி அமைப்புக்கள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன.

இந்தச் சிறிய மக்கட் குழுக்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பதாவது அண்மைக் காலங்களில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. மத்தியிலே எல்லா அதிகாரங்களையும் தம்வசம் வைத்துக் கொள்வதிலும் பார்க்க அவற்றைப் பகிர்ந்து கொள்வதே உசிதம் என்று காணப்பட்டதாலேயே பிரதேச சபைகள் சம்பந்தமான சட்டம் இயற்றப்பட்டது. நாங்கள் மத்திய அரசாங்கத்திடம் இருந்து தேசியம், தனித்துவம், சுயநிர்ணயம், சுதந்திரம் எனப் பலவற்றை எதிர்பார்க்கின்றோம். நாம் கேட்பவற்றைக் கொடுக்கக் கூடாது என்று நாட்டின் பெரும்பான்மையினர் பலர் கூக்குரல் இடுகின்றனர். ஆனால் வருங்காலம் பற்றிப் பாரிய அளவில் நாங்கள் நினைக்கும் அதே நேரத்தில் எம்மை நாமே கவனித்துக் கொள்ளவும் எமக்குரிய பொருளாதார நன்மைகளை நாமே பெற்றுக் கொள்ளவும் சிறிய அளவிலும் வழி வகுக்க முடியும் என்று எமக்கு வலியுறுத்துவதே இந்த உள்ளூராட்சி முறையாகும்.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திற்கு முன்னேற்பாடாக நடந்த இந்திய இலங்கை ஒப்பந்த விவாதங்கள் நாட்டின் சகல மாகாணங்களிலும் மாகாண சபைகளை அமைக்கும் வண்ணமாக அமையவில்லை. அவை வடகிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விதத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போதைய ஜனாதிபதி தான் மாகாண சபை ஏற்பாடுகளைச் சகல மாகாணங்களுக்கும் ஏற்புடையதாக்கினார்.

காரணம் தான் தமிழர்களுக்கு ஏதேனும் சலுகைகளைக் கொடுத்துதவியதாகச் சிங்கள மக்கள் அவரை அடையாளங் காணக்கூடாது என்பதற்காகவே. ஆனால் அதிகாரப் பரவலே பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் குறிக்கோள். அது போதுமானதாக அத்திருத்தச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டதா? இல்லையா? என்று பரிசீலிக்க இதுவரை காலமும் போதிய சந்தர்ப்பங்கள் எழவில்லை. ஏனென்றால் பொதுவாகத் தெற்கில் உள்ள மாகாண சபைகள் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அங்கத்தவர்களையே கொண்டிருந்தது. அப்படி இல்லை என்றாலும் பெரும்பான்மையின மக்களே மத்திய அரசாங்கத்திலும் இருந்தார்கள் மாகாண சபைகளிலும் இருந்தார்கள்.

அவர்களுக்குள் அதிகாரப் பகிர்வு கட்டாயமாகத் தேவைப்படவில்லை. உள்ளூராட்சி சிறந்து விளங்க வேண்டுமென்றும் அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் அபிப்பிராயம் கொண்டிருந்தார்களேயாகில் போதிய அதிகாரப் பகிர்வு தேவைப்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் அவற்றை இது வரை வேண்டுமென்று உரிய கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. அதற்கான அவசியமும் அவர்களுக்கு இருக்கவில்லை .

ஆனால் வடமாகாணம் அப்படியல்ல. நாங்கள் கட்சியால் வேறுபட்டவர்கள மட்டுமல்ல. கலைகளால் வேறுபட்டவர்கள், மொழியினால் வேறுபட்டவர்கள் காலாதிகாலமாகத் தனித்து வேறுபட்ட வாழ்க்கை முறையில் வளர்ந்து வந்தவர்கள் எமக்குத் தான் அதிகாரப் பகிர்வு தேவைப்பட்டது. ஆனால் சுமார் 25 வருடங்களாக அது எமக்குக் கிட்டவில்லை. தற்போது கிட்டியதும் தான் தெரிகிறது. ஆளுநருடன் சேர்ந்து அரசாங்கம் எந்தளவிற்கு எமது அதிகாரப் பகிர்வை அர்த்தமற்றதாக்கலாம் என்பதை அதாவது எமது அதிகாரப் பகிர்விற்காகவே பதின்மூன்றாவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனை 25 வருடங்களுக்கு மேல் எம் பூமியில் நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால் நடைமுறைப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததும் அதைச் சிதைக்கச் சதி நடக்கின்றது. ஆனால் தேர்தலின் போது இவ்வாறு நடக்கக் கூடும் என்பது நாம் அறிந்து வைத்திருந்தது தான். ஆனால் எந்த அளவுக்கு என்பதை அறியாதிருந்தோம்

அவ்வாறு நடந்தால் நாம் இங்கு நடப்பதை உலகறியச் செய்து சிங்கள, தமிழ்ப் பேசும் மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டினருக்கும் இங்கு நடக்கும் அநியாயங்கள் பற்றி உரக்கக் கூறுவோம் என்றும் சொல்லி வைத்திருந்தோம். அதை இப்பொழுது செய்து வருகின்றோம் .

எமது வரவு செலவுத்திட்டம் நேற்று முன்தினம் வட மாகாணசபையில் ஏகமனதாக நிறைவேறியது. அங்கு எமது சகல மக்களும் ஒத்துழைப்பு நல்கினார்கள். எம்முள் அரசியல் பிரிவினைகள், சமூகப் பிரிவினைகள் மொழிப் பிரிவினைகள், மதப் பிரிவினைகள் இருந்தும் வாக்குக்கு விடப்பட வேண்டும் என்று கோராது ஏகமனதாக எமது வரவு செலவுத் திட்டம் ஏற்கப்பட்டதென்றால் விவாதத்தின் போது மூன்று காரியங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று அர்த்தம் . ஒன்று கொடுத்த பணத்தை நாம் எவ்வாறு செலவழிக்க உள்ளோமோ அதை அவ்வாறு செலவழிக்கலாம் என்பது .

அடுத்து கிடைத்திருக்கும் நிதி மிகச் சொற்பமே. அதை வைத்து எதனைச் செய்ய முடியும் என்று எமது கட்சியினர் மட்டுமல்ல அரசாங்கத்துடன் இணைந்த எதிர்க் கட்சியினரும் அதே கேள்வியைத் தான் முன்வைத்துள்ளனர். அதாவது அரசாங்கத்தின் வாரிசுகளாக எமது மாகாண சபையில் இருக்கும் எம் உறுப்பினர்களும் தமது ‘தந்தையார்’ அனுமதித்த நிதி போதாது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மூன்றாவதாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதற்கான நிதி உதவி கிடைக்கவில்லை. எனினும் எம்முடன் சேர்ந்து வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய நிதியுதவிகளை எமது எதிர்க்கட்சியினரும் எதிர்பார்க்கின்றார்கள் என்பது புலனாகின்றது.

எமது எதிர்கட்சியினர் சிறிய தொகையினர் ஆகினும் அவர்களுள் மூன்று இன மக்களும் பிரதிநிதித்துவப் பட்டுள்ளார்கள். தமிழ்ப் பேசும் தமிழ்த் சகோதரரும் முஸ்லிம் சகோதரர்களும் மற்றும் தமிழ் வாழ்விடங்களில் பிறந்து வளர்ந்த சிங்கள சகோதரர்களும் அவர்களிடையே இருக்கின்றார்கள். அவர்களுக்கு எமது நேசக்கரம் நீட்டி அணைத்தே நாம் எமது அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளோம். அவர்களை நாம் எதிரிகளாகப் பார்க்கவில்லை. எம்மவராகவே பார்க்கின்றோம். எமது இந்த நோக்கு அரசாங்கத்திற்கும் வரவேண்டும் என்பதே எமது விருப்பம்.

அதாவது உள்ளூராட்சி என்று அதற்கான சட்டங்கள் கொண்டு வரப்பட்டபோது உள்ளூராட்சி மட்டத்தில் நிர்வாகப் பணிகளை அபிவிருத்திப் பணிகளை அந்தந்த மக்கள் முன்னெடுக்கவே அவ்வாறான சட்டங்கள் இயற்றப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் நாம் பார்ப்பது நாட்டின் மத்திய அரசாங்கம் எம்மை சகல விதங்களிலும் கட்டுப்படுத்தி தமது செல்வாக்கை நிலை நிறுத்தவே சகல நடவடிக்கைகளிலும் இறங்கி வருவதையே. இதனால் தான் கூறுகின்றேன் அரசாங்கம் எம்மை நாமே ஆள எமக்கு இடமளிக்க வேண்டும் என்று தமது கரத்தைப் பலமுடையதாக்கி எம்மை வலுஇழக்கச் செய்ய அரசாங்கம் முயலக் கூடாது. நாம் அரச சார்புப் பிரதிநிதிகளுடன் எவ்வாறு நல்லெண்ணத்துடன் நற்பாங்குடன் நடந்து கொள்கின்றோமோ அதே போன்றுதான் உறவை மத்திய அரசாங்கத்துடன் பேணவே நாம் விருப்பமுடையவராய் இருக்கின்றோம்.

ஆனால் நேசக்கரம் காட்டுவது போல் காட்டி எம்மை வஞ்சித்து அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த முயலக்கூடாது. மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்க அரசாங்கம் முன்வர வேண்டும். சென்ற தேர்தலில் மக்களின் ஆணை மூன்று முக்கிய விடங்களை அரசாங்கத்திற்கு உணர்த்தியிருக்க வேண்டும் .

ஒன்று மக்களை மக்களாய் நடத்திய இராணுவத்தின் யாழ். மாவட்டத் தளபதியைத் தொடர்ந்து ஆளுநராக வைத்திருப்பதை மக்கள் நிராகரித்துள்ளார்கள் என்பது. இரண்டு மக்கள் வாழ்வாதாரங்களை முடக்கி அவர்தம் வாழ்க்கையை சுதந்திரம் அற்றதாக்கியுள்ள இராணுவத்தை வட மாகாணத்தில் போர் முடிந்து ஐந்து வருடங்களின் பின்னரும் தொடர்ந்து பெருவாரியாக நிலை நிறுத்தி வைத்திருப்பதை மக்கள் நிராகரித்துள்ளார்கள். மூன்று வட மாகாணத் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விதத்தில் நாம் முன் வைத்த அரசியல் தீர்வை மக்கள் பெருவாரியாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எனவே அரசாங்கத்தின் கொள்கைகளை நிராகரித்து எமது கொள்கைகளை ஏற்றுள்ளார்கள். இவற்றை அரசாங்கம் தமது கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் .

உள்ளூராட்சி என்பது அந்தந்த மட்டத்தில் இருக்கும் மக்களின் மனோநிலைக்கு ஏற்றவாறு அவர்கள் அரசியல் நடத்த அனுமதிப்பதென்றால் அந்தக் கொள்கையில் தமக்கு ஈடுபாடு இருக்கின்றது என்பதை அரசாங்கம் நடை முறையில் காட்ட வேண்டும் . எவ்வாறு நாங்கள் எமது எதிர்க்கட்சியினரை எம்முடைய சகோதரர்கள் என்று ஏற்று அதற்கேற்றால் போல் அவர்களும் தமது பெருந்தன்மையை எமக்குணர்த்தினால் மட்டுமே எம்மால் அதற்கு மாற்றீடாக எமது நல்லுணர்வுகளைக் காட்ட முடியும் . மத்திய அரசாங்கம் மாகாண அரசாங்கம் பிரதேச சபைகள் ஆகியன ஒன்றுக்கொன்று முரண்படாது வாழ முயற்சிக்க வேண்டும்.

இந்த உள்ளூராட்சி விழாவின் போது நான் உங்கள் முன் வைக்கும் கருத்து இதுதான். அந்தந்த மட்டத்தில் உள்ள மக்களுக்கு அளிக்கவேண்டிய அதிகாரங்களை நாங்கள் போதுமானதாக வழங்கி நாமும் வாழ்வோம் மற்றவர்களையும் வாழ விடுவோம்.

Related Posts