Ad Widget

எம்மீதான அவதூறுகளை பரப்பும் கூட்டமைப்பினர் மக்களுக்கான விடியலைப் பற்றி சிந்திப்பதில்லை – அமைச்சர் டக்ளஸ்

அரசுடனான நல்லுறவின் மூலமே சுனாமியாலும், யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட எமது பகுதிகளை அபிவிருத்தியால் கட்டியெழுப்பமுடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

dak-thevananthaaa

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்திற்கு அண்மையில் வருகைதந்த பொதுமக்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது பகுதிகளில் பல தசாப்த காலமாக நீடித்து வந்த யுத்தத்தினாலும் சுனாமியினாலும் எமது பகுதிகளின் அபிவிருத்தி மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்திருந்தது.

அதுமட்டுமன்றி எமது மாணவர்களின் கல்வி நிலையும் மக்களின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சி கண்டிருந்தன.

இந்நிலையில் யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் அரசினதும், அரசசார்பற்ற நிறுவனங்களினதும் உதவிகளுடன் எமது பகுதிகளின் பல்வேறு அபவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில் முக்கியமாக வீதிகள், வீட்டுத் திட்ட வசதிகள், குடிநீர் வசதிகள், மின்சாரம், போக்குவரத்து உட்கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திகளுடன் உள்ளூர் உற்பத்தித்துறைகளை மேம்படுத்தும் வகையிலான செயற்திட்டங்களும் அரசின் கொள்கைத் திட்டங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இவ்வாறான அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு எமது இணக்க அரசியலும் அரசுடனான எமது நல்லுறவுமே பிரதான காரணிகளாக அமைந்துள்ளன.

ஆனால் இவற்றை விரும்பாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமக்கு எதிரான அவதூறுகளை முன்வைப்பதிலும் தவறான பிரசாரங்களை ஊடாக மக்களை குழப்பி வருவதிலும் முனைப்புடன் செயற்படுகின்றனர். ஆனால் மக்களின் விடியலைப் பற்றி அவர்கள் ஒரு போதும் சிந்திப்பதில்லை.

எனவே, மக்களாகிய நீங்கள் இந்த உண்மைத்தன்மைகளை உணர்ந்து கொண்டு எதிர்காலத்தில் மக்களின் விடியலுக்காக உழைப்பவர்களை மேலும் பலப்படுத்த வேண்டுமென்பதுடன், அவ்வாறான சந்தர்ப்பத்திலேயே சுனாமியாலும் யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.

Related Posts