Ad Widget

எமது விடுதலைக்காக இன, மத பேதங்களைக் கடந்து பற்றுறுதியுடன் செயற்படுங்கள்! – தமிழ் அரசியல் கைதிகள் வேண்டுகோள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் ஏதாவது நன்மை விளையலாம் என்ற எதிர்பார்ப்புடன் இந்தச் சந்தர்ப்பத்தை நோக்குவதால், எமது விடுதலைக்காக இன, மத பேதங்களைக் கடந்து நீதி, நியாயம் வேண்டி அனைத்துத் தரப்பினரும் மனிதநேயத்துடன் தொடர்ந்தும் பற்றுறுதியுடன் செயற்படவேண்டும்’ – என்று அனைத்து இலங்கைத் தமிழ் அரசியல் கைதிகள் அமைப்பு, அறிக்கையொன்றினூடாக வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமது விடுதலை தொடர்பில் அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:-

நியாயமற்ற முறையில் நீண்ட நெடும் சிறை வாழ்வை அனுபவித்துக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதியினராகிய நாம், எமது பெற்றோர், உறவினர்கள் ஊடாக விடுக்கும் பகிரங்க வேண்டுகோள். ஆண்டாண்டு காலமாக ஆட்சிபீடமேறும் அரசுகள் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் குழுக்கள் அமைத்து ஆராய்வதும், அவ்வப்போது எழும் கோஷங்களை அமைதிப்படுத்துவதற்கு வாக்குறுதிகளை வழங்குவதும் வாடிக்கையாகியுள்ளது.

அரசியல் கைதிகள் விடயத்தில் நாளுக்கு நாள் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டுவரும் அரசியல் தலைவர்களின் போக்குகளால் நாம் இறுக்கமடைந்துள்ளோம். இந்நிலையில், இன, மத பேதங்களைக் கடந்து நீதி, நியாயம் வேண்டி விஜயகுமாரி, விபூசிகா ஆகியோர் விடுதலைக்காகக் குரல் கொடுத்ததைப்போன்று, அனைத்து மதத் தலைவர்கள், மனித உரிமை அமைப்புகள், சிவில் சமூகங்கள், பிரஜைகள் குழுக்கள், மாணவர் ஒன்றியங்கள், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்புகள், காணாமல்போனோர் தொடர்பாக குரல் கொடுக்கும் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் என்பன தமிழ் அரசியல் கைதிகளாகிய எமது விடுதலைக்கு பரந்துபட்ட ரீதியில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தற்போது நாட்டிலுள்ள அரசியல் சூழல் அடுத்துவரும் நாட்களில் எவ்வாறு மாற்றமடையும் என்பதைக் கணிப்பிடமுடியாத நிலைமை உள்ளதால், இன்றைய ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் எமக்கு ஏதாவது நன்மை விளையலாம் என்ற எதிர்பார்ப்புடன் இந்தச் சந்தர்ப்பத்தை நோக்குகின்றோம்.

ஆகவே, இந்த ஊடக அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று, எமது விடுதலைக்காக அனைத்து தரப்பினரும் மனிதநேயத்துடன் தொடர்ந்தும் பற்றுறுதியுடன் செயற்படவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம் – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts