Ad Widget

எமது மக்களின் நிலங்களை, வாழ்வாதாரங்களை அபகரிக்கும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது!

வடக்கு மாகாணத்தில் முறையற்ற குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தி, எமது மக்களின் நிலங்களை அம் மக்களுக்கே வழங்கும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வன்னி மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக எமது மக்களில் பலர் தங்களது சொந்த காணிகளைவிட்டு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு கைவிடப்பட்ட காணிகளில் யுத்தம் முடிவுற்றதன் பின்னர், பல தரப்பினரும் வந்து குடியேறிய நிலையில், அக் காணிகளைத் தங்களுக்கு உரித்தாக்கிக் கொள்ளும் முயற்சிகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு சில அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் துணை போகின்றனர்.

யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் பொதுமக்களின் காணிகளில் பல புலிகள் இயக்கத்தினரால் பயன்படுத்தப்பட்டன. யுத்தம் முடிவுற்றதன் பின்னர் அக் காணிகள், புலிகளுடையவை எனக் கூறப்பட்டு, பாதுகாப்புத் தரப்பினரால் பயன்படுத்தப்பட்டன.

இவற்றுள் பல காணிகளை நாம் கடந்த காலங்களில் விடுவித்துள்ளோம். யாழ். பல்கலைக்கழகத்திற்குரிய கிளிநொச்சி, அறிவியல்நகர் காணி அவ்வாறு மீட்கப்பட்ட காணிகளுள் ஒன்றாகும்.

எமது மக்களின் நிலங்கள் எமது மக்களுக்கே சொந்தம் என்ற எமது நிலைப்பாட்டினை முன்னிறுத்தியே நாம் இவ்விடயம் தொடர்பில் செயற்பட்டு வருகின்றோம்.

எனவே, தற்போதைய அரசு இவ்விடயம் தொடர்பில் அவதானஞ் செலுத்தி, உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

எமது மக்களின் நிலங்களை, வாழ்வாதாரங்களை அபகரிக்கும் வகையிலான குடியேற்றங்கள் உருவாகுவதை எம்மால் அனுமதிக்க முடியாது என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts