Ad Widget

எமது சமூகத்தில் புரையோடியுள்ள களைகளையும் களைய வேண்டும் – பா.கஜதீபன்

இன்று எமது சமூகத்தில் திட்டமிடப்பட்டு உள்நுழைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வகையிலான களைகளை நாம் இனங்கண்டு அகற்றவேண்டியிருக்கின்றது. இப்படியான களைகள் ஒவ்வொன்றும் எமது மக்களுக்கு ஒவ்வொருவகையிலான பாதிப்புக்களை ஏற்படுத்திய வண்ணமே இருக்கின்றன. அப்படி வேரோடும், வேரடி மண்ணோடும் களையப்படவேண்டிய பலவற்றில் இயற்கையான களைகளில் ஒன்றான பாதீனியம் எனும் நச்சுச்செடியையும் நாம் நோக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன்.

p-kajatheepan

பாதீனியம் செடி ஒழிப்பில் முன்னிலை பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று சிறுப்பிட்டி ஜனசக்தி சனசமூக நிலையத்தில் காலை 9 மணியளவில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஹால்தீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

பல்வேறு வகையான கிண்டல் பேச்சுக்கள், நாகரிகமற்றவர்களின் விமர்சனங்கள் என்பவற்றையும் தாங்கி, அவற்றையெல்லாம் தாண்டி வடமாகாணம் முழுவதும் கிட்டத்தட்ட 38,000 கிலோகிராம் பாத்தீனிய விஷச்செடியை இல்லாமற்செய்த ஒரு திருப்தியோடு இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றார் எமது வடமாகாண விவசாய அமைச்சர் சூழலியலாளர் ஐங்கரநேசன். சிலநேரங்களில் அவர் மீதான பாத்தீனியம் செடி ஒழிப்பு தொடர்பான விமர்சனத்தை மிகவும் கவலையோடு என்னிடம் பகிர்ந்துகொண்ட போது, அவருக்கு நான் சொன்னேன் “எமக்கு எதிராகவும், எமதுமக்களுக்கு எதிராகவும் செயற்பட்டுவருபவர்கள் எம்மைப் புகழ்ந்தாலோ அல்லது அவர்கள் எம்மை விமர்சிக்காமல் இருந்தாலோதான் நாம் தவறாக இருக்கின்றோம் அல்லது சரியான முறையில் செயற்படவில்லை என்று அர்த்தமாகும்.

எனவே எம்மை எதிர்ப்பவர்களால் நாம் விமர்சிக்கப்படுகின்றபோது நாம் எமது பாதையில் சரியாகப் பயணிக்கின்றோம் என்பதுதானே அர்த்தம். எனவே நாம் வீணர்களின் வெட்டிப்பேச்சுகளைப் புறந்தள்ளி துணிச்சலுடன் செயற்படுவோம்” என்றேன். எனவேதான் எம்மிடமிருக்கும் மிகவும் அற்ப சொற்ப அதிகாரங்களை வைத்தே, பலரது தடைகளையும் தாண்டி நாம் இவ்வளவிற்கு முயன்று பார்க்கின்றோம். முழு அதிகாரங்களையும் எமக்கு வழங்குவர்களாயின் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு சிறந்ததொரு சேவையை வழங்க முடியுமாக இருக்கும்.

கடந்த மாதம், எப்பொழுதும் மத்திய அரசிலே ஒட்டிக்கொண்டிருக்கும் சிறுகைத்தொழில் அமைச்சரும், அவரது கூட்டாளிகளும் “நீங்கள் மாகாணசபையைக் கைப்பற்றி 07 மாதங்களாகி விட்டன, இக்காலப் பகுதிக்குள் பல்வேறு வகையான நியதிச் சட்டங்களை உருவாக்கிச் செயற்பட்டிருக்க வேண்டும்” என்றார்கள். அதைவிட நேரடியாகவே “முடியாவிட்டால் சொல்லுங்கள் நாங்கள் உருவாக்குகின்றோம்”எனவும் சொன்னார்கள். ஆனால் நாம் சாதாரணமாக உருவாக்கிக்கொடுத்த எந்தச் சட்டச்சிக்கல்களும் இல்லாத நியதிச் சட்டங்களுக்கான அனுமதிகூட அரச தரப்பால் இன்னும் வழங்கப்படவில்லை என்பதைக்கூட அவர்கள் அறியாமல் உள்ளனர்.

அது தொடர்பான கோப்புகள் ஆளுநரிடம் உள்ளன. இதுதான் இன்றைய உண்மை நிலைமை. இதை எமது மக்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வையும் எமது மக்கள் மத்தியில் மேற்கொள்ள உள்ளோம்.

ஆக சாதாரண நியதிச்சட்டங்களுக்கான அனுமதியைக் கூடப் பெறுவதில் தடங்கலான நிலைமையிலேயே இவ்வாறான செயற்பாடுகளை நாம் மிகவும் கஷ்டப்பட்டு முன்னெடுக்கவேண்டியுள்ளது. போர் அழித்த எமது தாயக வளங்களை இன்று போர் ஓய்ந்த பின் இயற்கையிடமிருந்து கூட பாதுகாக்க வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

இன்று இப்பணியை பல தடைகளையும் தாண்டி எமது வடமாகாண விவசாய அமைச்சர் சூழலியலாளர் ஐங்கரநேசன் அவர்கள் மிகத்திறமையாக முன்னெடுத்து வருகிறார் என்றார். அதிகளவில் பாதீனிய நச்சுச்செடியை அழித்தவர்களுக்கான பணப்பரிசில்கள் விருந்தினர்களால் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், அ.பரஞ்சோதி மற்றும் செடி ஒழிப்பில் முன்னிலை வகித்தோர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts