எமது அரசியல்வாதிகள் பலருக்கு அவர்களுடைய பை நிறைய பணம் கிடைத்தால் போதும்!-முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன்

அனைத்து உரிமைகளையும் தம் கைக்குள் மூடி மறைத்துக் கொண்டு நல்லிணக்கம் குறித்து பேசுவோரின் பொறிக்குள் சிக்கினால் எதிர்வரும் பத்தாண்டுக்குள் வடக்கு- கிழக்கு எங்கும் பேரினவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கும் என, வடக்கு முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் பொருளாதார விருத்தி குறித்து எழுப்பப்பட்ட வாரமொரு கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

”வட மாகாணத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினரை தரித்து வைத்துக்கொண்டு, சகல நிர்வாக, பொருளாதார, அரசியல் உரித்துக்களையும் தம் கையில் வைத்துக் கொண்டு, பொருளாதார விருத்தி, நல்லிணக்கம் குறித்து பேசுவது எம்மைத் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க எடுக்கும் நடவடிக்கையே. அந்த பொறியினுள் அகப்பட்டுக் கொண்டோமானால் இன்னும் பத்து வருடங்களில் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பேரினவாத ஆதிக்கம் மேலோங்கிவிடும்.

மேலும், பொருளாதார விருத்தி, நல்லிணக்கம் என்று கூறித்திரியும் எமது அரசியல்வாதிகள் பலர் சுயநலத்துக்காகவே அதனை விரும்புகின்றார்கள். தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கின்றதோ, இல்லையோ அவர்களுக்கு பை நிறையப் பணம் கிடைத்தால் போதும்.

பணத்தை பெற்றுக் கொண்டு அதற்குத் தட்சணையாக பௌத்த மதத் தலங்களை அமைக்கவிடுவதுடன், தென்னவர் இங்கு காலூண்ட இடமளிப்பார்கள். மொத்தத்தில் தமிழ் மக்களின் தனித்துவத்தைத் தமது பையை நிரப்பி தென்னவர்களுக்கு விற்று விடுவார்கள்.

எனவேதான் அரசியல் தீர்வு முதலில் வரவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். அதற்காக நாம் மத்தியைப் புறக்கணிக்கவில்லை. செய்வதைச் செய்யுங்கள் ஆனால் எங்களையும் பங்குதாரர்கள் ஆக்கிச் செய்யுங்கள் என்றே கூறி வருகின்றோம்” எனத் தெரிவித்தார்.

Related Posts