Ad Widget

என்ன பேச வேண்டும் என்று கூட மாவை சேனாதிராஜாவுக்கு தெரியவில்லை

இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் இதுவரை முன்னேற்றம் ஏற்படாத நிலையில் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கக்கூடாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம், வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு, காணிகள் விடுவிப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்கள் போன்ற பல்வேறு விடயங்களில் இன்னும் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்க கூடாது என்று ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதன்படி தற்போது பிரஸல்ஸ் பாராளுமன்றத்தில் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்குவது தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், இலங்கை அரசாங்கம் இந்த விடயங்களில் உண்மையான முன்னேற்றம் காணும் வரையில் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை வழங்கக் கூடாது என்று கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் வட மாகாணத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் இருப்பதாகவும், கடற்படை, விமானப்படையினரையும் சேர்த்து சுமார் இரண்டு இலட்சம் படையினர் இருப்பதாகவும் கூறிய சுரேஷ் பிரேமசந்திரன், சுமார் 10 இலட்சம் மக்கள் வாழும் பகுதிக்கு ஏன் இரண்டு இலட்சம் படையினர் தேவை என்று கூறினார்.

இது ஜனநாயக விரோத செயல் என்றும் வடக்கில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கருதினால் பொலிஸாரின் அளவை அதிகரிக்கலாம் என்று தெரிவித்தார்.

இதேவேளை, இந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள், அதுதான் எங்களுக்கு தற்போது இருக்கின்ற ஒரு சஞ்சலம் என்று மாவை சோனாதிராஜா அண்மையில் பேசியிருந்த விடயம் தொடர்பில் கருத்து வௌியிட்ட சுரேஷ் பிரேமசந்திரன், இவ்வாறான இழிநிலையில் இவர்கள் இருக்க கூடாது என்றும், இவ்வாறு பேசுவதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அத்துடன் என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது என்பதை கூட தெரியாத நிலையில் நடவடிக்கைகளில் மாவை சேனாதிராஜாவுக்கு தற்போது ஈடுபட்டு வருவதாகவும் சுரேஷ் பிரேமசந்திரன் கூறினார்.

Related Posts