Ad Widget

எனது வீட்டை இடித்து விட்டனர், கண்ணீருடன் அந்தோனிப்பிள்ளை ஜெனிட்டா

ஆறுமாத காலப்பகுதிக்கு முன்னர் சேதமின்றி இருந்த வீட்டை தற்போது இடித்து அழித்து மண்மேடாக்கி விட்டனர் என வீட்டின் உரிமையாளரான அந்தோனிப்பிள்ளை ஜெனிட்டா கண்ணீருடன் தெரிவித்தார்.

உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் வளலாய் ஜே – 284 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 272 குடும்பங்கள் தமது காணிகளை வெள்ளிக்கிழமை (13) அங்கு சென்று அடையாளப்படுத்தினர்.

தனது காணியையும் வீட்டையும் பார்க்கும் ஆவலுடன் தனது குடும்பத்துடன் ஜெனிட்டா வந்த வேளையில், வீடு இடித்து மண்மேடாக்கப்பட்டு இருந்து. அதனை கண்ணுற்று கதறி அழுதார்.

அதன்போது அவர் கூறுகையில், கடந்த 1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்றோம். அதன் பின்னர் எமது வீட்டுக்கு வரமுடியவில்லை. கடந்த வருடம் எனது மகனும் இன்னும் சிலரும் இங்கு நிலைகொண்டு இருந்த இராணுவத்தின் உதவியுடன் எமது வீட்டை வந்து பார்த்து சென்று இருந்தனர்.

கடந்த ஆண்டு (2014) ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி இறுதியாக வீட்டை பார்வையிட்டனர். அதன் போது சிறிய சேதங்களுடன் வீடு இருப்பதாக என்னிடம் கூறியிருந்தார்கள்.

வீடு இடிக்கப்படாமல் இருந்தது எனக்கு மிகுந்த சந்தோசத்தை தந்தது. இன்றைய தினம் எமது வீட்டை பார்க்கும் ஆவலுடனும் சந்தோசத்துடனும் வந்திருந்தோம்

வந்து பார்த்தால் எமது வீடு முற்றாக இடித்து அழிக்கப்பட்டு மண்மேடாக காட்சியளிக்கின்றது. இந்த வீட்டை ஆறு மாத காலத்துக்குள்ளேயே இடித்துள்ளனர் என தெரிவித்தார்.

Related Posts