2009ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது கணவரை மீட்டுத் தாருங்கள் என புவனேந்திரராசா இராசேஸ்வரி என்ற குடும்பத் தலைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
இராணுவத்தினரின் அறிவிப்புக்கேற்ப சரணடைந்த தனது கணவனை மனநோயாளியாக்கி காணாமல் போகச் செய்துள்ளனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கிளிநொச்சி – கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயதான அருணாச்சலம் புவனேந்திரராசா என்ற குடும்பஸ்தரே சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணமல்போயுள்ளார்.
விடுதலைப்புலிகளின் அமைப்பில் உறுப்பினராக இருந்த புவனேந்திரராசா இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து அவரது குடும்பத்தினருடன் இராமநாதன் முகாமில் வசித்துவந்துள்ளார்.
அதன்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த அனைவரும் சரணடைய வேண்டும் என சிறீலங்கா இராணுவம் விடுத்த உத்தரவிற்கு அமையவே 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் 15ஆம் திகதி இவர் இராணுவத்திடம் சரணடைந்திருந்தார்.
இதன் பின்னர் புனர்வாழ்வு என்ற பெயரில் வவுனியா – உலுக்குளம் புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த குடும்பஸ்தர் சுகவீனமுற்ற நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
எனினும் சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவித்து, சிறீலங்கா காவல்துறை அதிகாரிகள் குறித்த நபரின் சொந்த இடமான கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது வீட்டில் சென்று தேடுதல் நடத்தியதாக காணாமல்போயுள்ள புவனேந்திரராசாவின் மனைவி இராசேஸ்வரி தெரிவித்தார்.
இதன்பின்னர் குறித்த குடும்பத்தினரை வவுனியாவுக்கு வருமாறு சிறீலங்கா இராணுவ தரப்பு சார்பாக தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
பின்னர் மீண்டும் கொழும்பிலிருந்து வந்துள்ளதாக தம்மை அடையாளப்படுத்திய அதிகாரிகள் இருவர் அவரது வீட்டுக்கு சென்றதாகவும், வீட்டுச்சூழலை அவதானித்ததுடன் மீண்டும் என்ன உதவி தேவை என வினவியதாகவும் இராசேஸ்வரி குறிப்பிட்டார்.
அன்றாடம் கடற்கரைக்கு சென்று வலைதிரிக்கும் தொழிலில் கிடைக்கும் அன்றாட வருமானத்தின் மூலமே ஒரு நேர உணவையாவது உண்பதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.