Ad Widget

எனது அரசியல் வாழ்வை விக்னேஸ்வரன் அழிக்கிறார்-சீ.வீ.கே.சிவஞானம்

வடக்கு மாகாண முதலமைச்சர், எனது அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்கச் செய்யும் வகையில் செயற்பட்டு வருகின்றார் என வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ. கே.சிவஞானம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

உறுப்பினர் பரஞ்சோதியின் பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டை முதலமைச்சர் உடனடியாகவே மறுத்திருந்தார்.

வடக்கு மாகாண சபையின் ஐம்பத்து எட்டாவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் நடைபெற்றது. இதன்போது உறுப்பினர் பரஞ்சோதியினால் வடக்கு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு உள்@ராட்சி சபைகளுக்கும் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களை பொறுப்பாக நியமிக்குமாறு கோரி பிரேரணை ஒன்றினை முன்மொழிந்தார்.

இதன் மீதான விவாதத்தின் போது உள்ளுராட்சி சபைகளுக்கான ஆலோசனை சபை உள்ளிட்ட எவற்றிலும் தாம் நியமிக்கப்படவில்லை எனக் கூறிய அவைத்தலைவர், இவ்வாறு தான் தொடர்ச்சியாக முதலமைச்சரால் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் என்னை யாராலும் அரசியலிலிருந்து தள்ளி விட முடியாது என்றார்.

நான் சாகும்வரை அரசியலில் இருப்பேன் எனவும் முதலமைச்சரிடம் அவைத் தலைவர் சவால் விடுத்தார். இதன்போது குறுக்கிட்ட முதலமைச்சர் தான் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவைத்தலைவருக்கு தனி மரியாதை உள்ளது எனவும், அவர் மேலே இருந்து கொண்டே எமக்கு ஆலோசனை வழங்குவார் என்ற காரணத்தினால் தான்,அவரை மேற்படி ஆலோசனைக் குழுவில் இணைத்துக்கொள்ளவில்லை எனவும் விளக்கம் கூறினார்.

எனினும் மீண்டும் தனது ஆதங்கத்தை தெரிவித்த அவைத் தலைவர், என்னை அரசியல் வாழ்விலிருந்து அஸ்தமிக்கச் செய்யும் செயற்பாடுகளில் முதலமைச்சர் ஈடுபடுவதாக சாடி எல்லாவற்றுக்கும் நன்றி எனவும் கூறினார்.

இந்த சர்ச்சை காரணமாக நேற்றைய அமர்வின் போது பல இடங்களில் அவைத்தலை வரும் முதலமைச்சரும் வெளிப்படையாகவே பல இடங்களில் கருத்து முரண்பட்டிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.

Related Posts