Ad Widget

எனது அரசியல் வாழ்க்கையில் அரசிடமிருந்து ஒரு சதத்தைக்கூட பெறவில்லை: முதலமைச்சருக்கு மாவை பதில்!

தெற்கில் வைத்து எனக்கு 26 மில்லியன் தரப்பட்டதான செய்தி எனது 50 வருட அரசியல் வாழ்க்கையைக் களங்கத்துக்குள்ளாகியிருக்கிறது. நாங்கள் எந்த அரசிடமிருந்தோ, அரசு ஆட்களிடமிருந்தோ ஒரு சதத்தைக் கூடப் பெற்றிருக்கவில்லை என்பதை அறுதியிட்டுக் கூறுவேன். – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா.

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மாவை சேனாதிராஜாவின் கடிதத்துக்கு பதில் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்தக்கடிதம் குறித்து விளக்கமளித்து தன்பக்க நியாயத்தை வெளிப்படுத்தும் விதத்தில் மாவை சேனாதிராஜா இன்று வெள்ளிக்கிழமை மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் முதலமைச்சருக்கு விளக்க அறிக்கை ஒன்றையும் அனுப்பிவைத்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் செயற்படவேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, நாடாளுமன்ற உறுப்பனர்கள் தனித்தும் கூட்டாகவும் ஒரே எண்ணத்துடன், ஒரே இலக்குடன், குறிப்பிட்ட அல்லது பொதுவேலைத்திட்டத்தின் அடிப்படையில் வினைத்திறளுடன் செயலாற்ற வேண்டும் என்பதே எனது எண்ணமும் கருத்தும்.

த.தே.கூட்டமைப்பின் தலைமையும், மாகாண சபையும் வேறுவேறாக அல்லது முரண்பாடுகளுடன் செயற்பட இடமளிக்கக்கூடாது. ஒற்றுமையாக செயற்படாது விட்டால் மக்களின் நம்பிக்கையை இழந்துவிடுவோம். இத்தகைய முரண்பாடுகள் ஏற்பாடாமல் தடுப்பதற்கு நாம் ஒருக்கிணைப்புடன் செயற்லாற்ற ஒரு பொறிமுறை அல்லது கட்டமைப்பு அவசியமெனக் கருதுகிறேன்.

அதன் பெருட்டுத் தங்களுடன் கலந்துரையாட விரும்புகிறேன். பத்திரிகைகள், இணையளத்தளங்களில், தாங்கள் கூறினீர்கள் என குறிப்பாக 09.06.2015 அன்று யாழ். பத்திரிகை ஒன்றில் முதலாம் பக்கச் செய்தியாகவும் கொழும்பில் இரண்டாம் பக்கச் செய்தியாகவும் வெளிவந்த பின் பத்திரிகையாளர்கள் அதற்குப பதில் கூறும்படி கேட்டபொழுது ‘தங்களிடம் கருத்தறிந்துதான் நான் பதில் சொல்வேன்’ என்று கூறயதை அறிவீர்கள்.

ஏனெனில் தாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தல்போட்டியிட்டு முதலமைச்சராகப் பதவி வகிப்பவர். மாகாண சபை எங்களுடையதுமாகும். தங்கள் பெயரில், முதலமைச்சர் பெயரில் வெளிவந்த அந்தச் செய்தியை மேற்கோள் காட்டி பல இணையத்தளங்களில் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் ஆகியோர் தெற்குக்கு அழைக்கப்பட்டு பிரதமரிடமிருந்து பெரும் நிதி, ஆடம்பர வாகனம் பெற்றதான செய்திகளும் அதைத் தொடர்ந்து விமர்சனங்களும் வெளிவந்திருக்கின்றன.

நிதியமைச்சரால், 2015 வரவு செலவுத் திட்ட அறிவிப்பில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மாவட்ட வரவு செலவுத்திட்ட அபிவிருத்தி நிதி 10 மில்லியன் ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டு பின் அந்நிதி வழங்கப்படவில்லை. மொத்தமாக வடக்கு, கிழக்கு த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் 13 கோடி (13000 லட்சம்) ரூபா கூடக் கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்திருக்கவேண்டும்.

இது தொடர்பில் பின்வருனவற்றை தங்கள் கவனத்துக்குத் தருகிறேன்.

1) 2015 ஏப்ரல் மாதம் பிரதமருடன் சம்பந்தன் அவர்கள் தலைமையில் அலரிமாளிகையில் நடந்த பேச்சில் இதனைக் கருத்திற் கொண்டு ‘பனம் பொருள் சபை’ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்டளது. முதலில் அச்சபை மீள்குடியேற்ற அமைச்சின கீழ் வருவதாக வர்த்மானி மூலம் அறிவிக்கப்பட்டது. மாகாணசபைக்குள் அந்த விடயம் வரவில்லை. உடன் மீள்குடியேற்ற அமைச்சுக்காவது மீண்டும் மாற்றவேண்மெனக் கேட்டிருந்தோம். எமது சமூகத்தில் சமூக ரீதியிலும் பொருளாதர ரீதியிலும் பின்தங்கியுள்ள மக்கள் ‘திக்கம் வடிசாலையை செயற்பட வைக்கமுடியாமல் எம்மிடம் நிதி கேட்கிறார்கள்’ என்ற பொழுது “தேவையான 2.5 மில்லியன் ரூபாவை (25 லட்சம்) நிதியமைச்சிலிருந்து ஒதுக்கலாம்” என்று பிரதமர் கூறினார். அந்த நிதியைக் கூட அமைச்சர் ரிஷாத் முடக்கிக் கொண்டார். அந்த நிதியைத் தவிர வேறு எந்த நிதியும் அப்பொழுது எம்மால் கோரப்படவில்லை.அந்தநிதி பனை அபிவிருத்திச் சபைக்கூடாக அந்தச் சங்கத்திற்குக் கிடைத்திருக்கவேண்டும். அந்தச் சபையின் தலைவர் மற்றும் பெரும்பாலான இயக்குநர்கள் எம்மால் நியமிக்கப்பட்டவர்களே. பனம் பெருள் சபை, மாகாணசபைக்கு வரவேண்டுமென்றும் நாம் வாதடியிருக்கின்றோம். தற்போதும் அந்த விடயம் மாகாண சபைக்கு உரியதல்ல. மீள்குடியேற்ற அமைச்சே உப்பள விடயத்தையும் கையாள்கிறது.

2) மீள்குடியேற்ற அமைச்சு, வலி.வடக்கு, வளலாய், சம்பூர் பிரதேசங்களுக்கு மீள்குடியேற்றத்துக்கு அமைச்சிடம் நிதி போதாமலிருக்கிறது என யாழ். செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அந்த அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். அதன்பின் அரச அதிபரிடமும் மீள்குடியேற்ற அமைச்சுச் செயலாளரிடமும் பெற்ற நிதி மதிப்பீட்டையாவது வழங்கவேண்டுமென நானும் சுமந்திரனும் பிரதமரிடம் நாடாளுமன்றக் கட்டத்தில் வைத்துக் கேட்டுக்கொண்டோம். அந்த விடயமும் மீள்குடியேற்ற அமைச்சுதான் தற்போதும் கையாள்கிறது. மீள்குடியேற்றத்துக்கு போதி நிதி கோருவது எமது கடமை.

3) காங்கேசன்துறை துறைமுகம், மற்றும் பலாலி விமானத்தள அபிவிருத்தி தொடர்பாக சென்ற ஆட்சிக்காலத்திலேயே பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடம் பேசினோம். பின் காங்.துறைமுகம், மற்றும் பலாலி விமானத்தள அப்விருத்திக்கு மக்களின் நிலத்தை அபகரிக்காமல் வடக்கே கடலின் பக்கமாக அபிவிருத்தி செய்யவேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம். சென்ற மாதம் பலாலி விமானத்தள அபிவிருத்தி பற்றி திட்ட வரைவு – கடல் பக்கமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான ஆவணம் அரசினால் என்னிடம் தரப்பட்டுள்ளது. அந்த விடயம் மத்திய அரசுக்குரியது. அதற்குரிய பெரும் நிதியை சர்வதேச நாடுகளிடம் கோருவது பொறுப்புடையதாகும். இது பற்றி இந்தியப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடமும், இந்தியப் பிரதமர் மோடியுடனும் பேசியிருக்கிறோம். இவை யாவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் அத்தியாவசிய கடமைகளாகும்.

ஆனால் இணையத்தளங்களில் தெற்கில் வைத்து எனக்கு 26 மில்லியன் தரப்பட்டதான செய்தி எனது 50 வருட அரசியல் வாழ்க்கையைக் களங்கத்துக்குள்ளாகியிருப்பதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இச்செய்தி எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாங்கள் எந்த அரசிடமிருந்தோ, அரசு ஆட்களிடமிருந்தோ ஒரு சதத்தைக் கூடப் பெற்றிருக்கவில்லை என்பதை அறுதியிட்டுக் கூறுவேன்.

இது மிகவும் ஒரு பொய்யான செய்தி. ஒரு பொய் செய்தியை வெளியிட்டு பின் பக்கம் பக்கமாக த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பனர்கள் ‘சோரம் போய்விட்டார்கள்’ என வெளியிடுவார்கள். இச்செய்திகள், விமர்சனங்கள்தான் த.தே.கூட்டமைப்பை சீர்குலைப்பனவாகும். விரைவில் ஒரு பொதுத் தேர்தலுக்கு நாம் முகம்கொடுக்கவேண்டிய சந்தர்ப்பத்தில் இத்தகைய செய்திகள், விமர்சனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பெரிதும் பாதிக்கும் என்பதையிட்டு வேதனையடைகிறோம்.

ஏதோ தெற்குக்கு அழைத்து எங்களுடைய சட்டைப் பைக்குள் பெரும் நிதியை வைத்துவிட்டது போல் செய்திகள் வருகின்றன. இது பற்றி நாம் பதில் கூறும் பொறுப்புடையவர்கள். நம் எல்லோருக்கும் ஒரு கூட்டுப் பொறுப்பு உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இதன் பொருட்டு இம்மாதம் 27அல்லது 28ஆம் திகதியில் யாழ்ப்பாணத்தில் அல்லது வவுனியாவில் மாகாண சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் அடங்கிய ஓர் இணைப்புக் குழுக் கூட்டமொன்றை நடத்தவேண்டும் என எண்ணியிருக்கிறேன்.

இது பற்றி சம்பந்தன் அவர்களிடமும் தெரிவித்துள்ளேன். இத்தகைய முரண்பாடுகள் இனி எப்போதும் எழாமலிருக்க வேண்டும். ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையிலல் ஒன்று பட்டு உழைப்போம் என நம்புகிறேன். தங்களுடைய ஒத்துழைப்புக் கிடைக்கும் என நம்புகிறறேன் – என்றுள்ளது.

Related Posts