எனக்கும் தேசிய உணர்வு அதிகமாகவே இருக்கின்றது -அங்கஜன் இராமநாதன்

என் உள்ளேயும் தமிழ் மற்றும் தேசிய உணர்வு அதிகமாகவே இருக்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் அந்த அறிக்கையில், “எனது அரசியல் பயணத்திலே பல ஆண்டுகளாக பலம் சேர்த்த மக்களுடைய துன்பங்களே எப்போதும் என்முன்னே பிம்பங்களாக நிழலாடும்.

உங்கள் உணர்வுகளை பிரதிபலிப்பவனாக தமிழ் மக்களுக்கான எனது சேவை எச்சந்தர்ப்பத்திலும் தொடரும் என்பதை இந்த நேரத்தில் கூற விரும்புகின்றேன்

எமது நேர்த்தியான பயணத்தை திசை திருப்புபவர்களுக்கு எதிராக இன்று மக்கள் இம்மாபெரும் ஆணையை வழங்கி இருப்பது எமது பயணத்திற்கான அங்கீகாரமே,

நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் சுதந்திர கட்சி சார்பாக எனது தலைமையில் புதிய அபிவிருத்தி இலக்குகளை அடையக் கூடிய வகையில் மக்கள் தடம் பதியப்பட்டிருக்கின்றது.

இந்த உள்ளூராட்சி சபை தேர்தலிலே சுயநலவாதிகளின் எதிர்பார்ப்புக்களை உடைத்து ஆதரவை வழங்கியதன் மூலம், எனது தலைமையில் 37 பிரதேச சபை உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

நிச்சயம் எனது சேவைகளும் தமிழ் மக்களுக்காக தொடரும் வேளை, சுதந்திரமான தேசிய பயணத்திற்காக எனது சேவை செயலாக்கம் பெறும் என உறுதிப்படுத்துகிறேன்

தேசியம் எனும் போர்வையில் பலர் தடைகளை ஏற்படுத்தியும் சற்றும் தளராது இலட்சியப் பயணத்தில் இணைந்த உங்களினால் இலக்குகளை நோக்கி வெற்றிநடை போட முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts