Ad Widget

எந்த சவாலுக்கும் முகம் கொடுக்கத் தயார் – பஷில்

திவிநெகுமவின் கீழ் அனைத்து நிதியும் மக்களுக்கு உதவுவதற்காகவே செலவிடப்பட்டுள்ளது. அது தவறு எனின் மக்களுக்காக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பஷில் ராஜபக்வின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் நல்லாட்சிக்குப் பதிலாக வைராக்கிய ஆட்சி தற்போது தோன்றியுள்ளதாகவும், மக்கள்வாத ஆட்சியை ஏற்படுத்த உயிர் தியாகத்துடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திவிநெகும திணைக்களத்தில் இடம் பெற்றுள்ள செயற்பாடுகள் தொடர்பில் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள நிதி மோசடி தடுப்புப் பிரிவிற்கு சென்ற பஷில் ராஜபக்ஷவிடம் சுமார் 8 மணிநேர விசாரணை நடத்தப்பட்டது.

அதன் பின்னர் பஷில் ராஜபக்ஷ, அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.கே. ரணவக்க ஆகியோர் கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் இந்த மூவரும் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுமதிக்கவும் அனுமதியளிக்கப்பட்டது.

சமுர்த்திப் பயனாளிகள் 14 இலட்சம் பேருக்கு ஒரு குடும்பத்திற்கு 10 ஆயிரம ரூபா வீதம் வீடுகளை திருத்திக்கொள்வதற்கு வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2500 ரூபா வீதம் 2900 மில்லியன் ரூபா வழங்கியமை, திவிநெகும திட்டம் அமைக்கப்பட்டதன் பின்னர் தாமாக முன்வந்து ஓய்வு பெற்ற 1067 உத்தியோகத்தர்களுக்கு 1700 மில்லியன் ரூபா நட்டஈடு திவிநெகும நிதியில் வழங்கியமை, 2014 ஆம் ஆண்டுக்காக 50 இலட்சம் சமுர்த்தி பஞ்சாங்கம் அச்சிட்டமைக்கு 23 மில்லியன் ரூபா செலவிட்டமை என்பனவே குற்றச்சாட்டுக்களாக முன்வைக்கப்பட்டுள்ளன.

சமுர்த்திப் பயனாளிகளுக்கு இந்த உதவிகள் அவர்களின் கரங்களுக்கே வழங்கப்பட்டதாகவும் எனவே எந்த நிதி மோசடியும் இடம் பெறவில்லையெனவும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் தமது இயலாமை காட்டப்பட்டுள்ளதாகவும், மூன்று மாதங்களில் நாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts