Ad Widget

எந்தவொரு வழிபாட்டு நிகழ்வையும் தடுக்கவேண்டிய தேவை பொலிஸாருக்கு இல்லையாம்

எந்தவொரு வழிபாட்டு நிகழ்வுகளையும் தடுக்கவேண்டும் என்ற தேவையோ அவசியமோ பொலிஸாருக்கு இல்லை. சட்டத்துக்கு உட்பட்டு நடந்தால் நாம் அதனை அங்கீகரிப்போம், சட்டவிரோதமான முறையில் நடைபெற்றால் அதை நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று தடைசெய்வோம்.

police-vimala-sena

இவ்வாறு தெரிவித்தார் யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.ஜ.விமலசேன. யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்களுக்கும் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் இடையே இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் உடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த வாரம் சுன்னாகம் பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட மருதனார்மடம் சபாபதிப்பிள்ளை முகாமில் மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் சார்பில் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற அனுமதிக்க வேண்டும் என நடைபெறவிருந்த பிரார்த்தனையை இரகசியப் பொலிஸ் எனக் கூறி சென்ற இருவர் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்கள் தடைசெய்தமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்குப் பதிலளித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் – எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமய நடவடிக்கைகளை பொலிஸார் குழப்பமாட்டார்கள். ஆனால் குறிப்பிட்ட முகாமில் நடைபெறவிருந்த பிரார்த்தனையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் செய்யவேண்டாம் என தடுக்கின்றனர் என சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு பொலிஸாரை சிவில் உடையில் முகாமுக்கு அனுப்பி அதனை யார் குழப்புகின்றனர் என பார்க்கும் படி கூறினார்.

அவர்கள் சென்ற வேளையில் குறிப்பிட்ட இடத்தில் அத்தகையோர் எவரும் காணப்படவில்லை. இதனால் பொலிஸாரினால் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முடியவில்லை. குறிப்பிட்ட சம்பவம் சம்பந்தமாக யாரும் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டைப் பதிவு செய்யாமையால் மேற்கொண்டு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. – என்று தெரிவித்தார்.

கடந்த வாரம் வெளிநாட்டு தூதுவர் ஒருவருக்கு வட மாகாண முதலமைச்சர் தன்னை யார் யாரோ எல்லாம் புகைப்படம் எடுக்கிறார்கள் எனக் கூறியிருந்தார் அதற்குப் பதிலளித்த வெளிநாட்டு தூவரும் தனக்கும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன எனவும் தெரிவித்திருந்தார். இது சம்பந்தமாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பொலிஸ் அத்தியட்சகர் –

வட மாகாண முதலமைச்சர் தனக்கு பாதுகப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதினால் எம்மிடம் முறையிடலாம். அதனை விடுத்து எதனையும் தெரிவிக்காது யார் யரோ தன்னை புகைப்படம் எடுக்கின்றனர் எனக் கூறினால் எதனையும் செய்ய முடியாது ஏதாவது சம்பவம் தொடர்பாக யாரும் முறைப்பாடு செய்யும் சந்தர்ப்பத்திலேயே நாம் எதனையும் விசாரிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும். வெறுமனே எந்தவொரு முறைப்பாடுகளும் இன்றி எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. இந்த வகையில் வடமாகாண முதலமைச்சர் தனக்கு புகைப்படம் எடுப்பது சம்பந்தமாக பிரச்சினைகள உண்டு. இதனால் பாதுகாப்பு இல்லையென்று கருதினால் எமக்கு முறையிடலாம். முறையிட்டால் நாம் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் – என்றார்.

இதேவேளை – யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் கடந்த இரண்டு வார காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 240 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

Related Posts