Ad Widget

எந்தவொரு இனமும் இன்னொரு இனத்தை அடிபணிய வைக்க இடமளியேன் – ஜனாதிபதி

எந்தவொரு இனமும் இன்னொரு இனத்தினை அடக்கி அடிபணிய வைக்க முடியாது. அவ்வாறான ஒரு சூழ்நிலைக்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது’ என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

mahintha-tellippalai-hospital

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினை திறந்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

‘தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறைமுனை வரை நடை பயணத்தினை மேற்கொண்டு இன்று இவ்வாறான வைத்தியசாலையினை நிர்மாணித்த இரு இளைஞர்களுக்கும் இந்த நாட்டின் கௌரவத்தினை சமர்ப்பிக்க விரும்புகின்றேன்’ என்றார்.

‘கடந்த 30 வருட கொடூர காலத்தின் பின்னர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதையிட்டு மிகவும் சந்தோஷமடைகின்றேன். இதனைக் கருத்திற்கொள்ள வேண்டியது மக்களின் பொறுப்பு. வெளிநாட்டவர்கள் என்ன சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றார்.

‘வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நீதியரசர் என்ற வகையில் எங்களின் கௌரவத்தினைப் பெற்றுக்கொண்ட ஒருவர். அவர் இப்போது அரசியலுக்கு வந்து, எங்கே போனாலும் மேடைகளில் தனக்கென்று ஒரு இடத்தினைப் பிடித்து வைத்துள்ளார்.

அதற்கு சந்தோஷப்படுகின்றதா? கவலைப்படுகின்றதா என்று எனக்குத் தெரியவில்லை. இந்த நாட்டு மக்கள் சந்தோஷமாகவும் சமாதானமாகவும் வாழ வேண்டும்’.

‘போருக்கு பின்னர் வடபகுதியில் மக்களுடைய விவசாய நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொள்கின்றது, வடபகுதி மக்களின் கௌரவத்தினையும் இராணுவம் பாதிப்படையச் செய்கின்றது. இதனால் வடபகுதியிலிருந்து இராணுவத்தை வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதில் கூறவேண்டிய கடப்பாட்டில் நான் இருக்கின்றேன். கடந்த காலங்களில் முதலமைச்சர் இங்கு வந்தீர்களோ தெரியவில்லை. இந்த இடத்தில் பல இராணுவ முகாம்கள் இருந்தன. அத்துடன் வடக்கில் 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரையான படை வீரர்கள் இருந்தார்கள்.

ஆனால் தற்போது 10 முதல் 12 வரையான இராணுவ முகாம்கள் மாத்திரமே வடக்கில் இருக்கின்றன. அத்துடன், 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையான இராணுவத்தினர் மட்டுமே இங்கு இருக்கின்றார்கள். தேசிய பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு இராணுவம் முழு நாட்டிலும் இருக்க வேண்டும்’.

‘இன்று (19) காலை இங்கு வரும்பொழுது வலம்புரி பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் ஒரு செய்தியினை பார்த்தேன். இராணுவம் பற்றிய விடயங்களை தெரிந்து கொண்டேன். நாங்கள் அனைவரும் மனிதர்கள். ஒரே விதமாகத்தான் பிறந்தோம். எல்லோரினதும் இரத்தம் சிவப்பு நிறம் தான். எங்களுக்கு கறுப்பு, நீலம், வெள்ளை, பச்சை என்று வித்தியாசமான நிறங்களில் இரத்தம் இல்லை.

யுத்தத்தின் பின்னர் இங்கு இருந்த நிலைமை சற்று கடினமாக இருந்தது. அவற்றினை சீர்செய்வதற்கு 17 மாதங்கள் ஆகின. 3 இலட்சம் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். அத்துடன், பாதை, மீன்பிடி ஆகியவற்றில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன், 14 ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டது. இவற்றினை மிக குறுகிய காலத்திற்குள் செய்ய முடித்தோம். ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், போன்ற தேர்தல்கள் நாடுபூராகவும் நடத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு ஜனநாயக உரிமை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. உங்களைப் போன்று நானும் அரசியல்வாதிதான்’ என்றார்.

‘புற்றுநோயை குணப்படுத்துவதற்கு இனம், மதம் பார்ப்பதில்லை. இந்த நாட்டில் இருக்கும் மக்கள் ஒரே சமமானவர்கள். அனைவரும் அனைத்தினையும் பெற வேண்டும். 300 மில்லியன் ரூபா நிதியில் 120 கட்டில்களைக் கொண்டு இந்த புற்றுநோய் வைத்தியசாலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை வடமாகாண மக்கள் மட்டுமன்றி அனைவரும் நன்றாக பாதுகாக்க வேண்டும்.

அத்துடன் சுகாதாரத்திற்கு என 157 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் 5 புற்றுநோய் வைத்தியசாலைகள் இருக்கின்றன. அதில் 5ஆவதாக யாழ்ப்பாணம் புற்றுநோய் வைத்தியசாலை இருக்கின்றது’ என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

‘ஒருநாளும் தவறான வழிக்குப் போகாமல் வாழ வேண்டும். பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வடமாகாண சபை மூலம் நல்ல சேவையினை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். யார் என்ன சொன்னாலும், உதவி செய்ய நான் ஆயத்தமாக இருக்கின்றேன்.

உங்கள் பிரதேசம் இன்னும் முன்னேற வேண்டும். நாங்கள் ஒரு தாய் மக்கள். பொய் பிரச்சாரத்தினை நம்ப வேண்டாம். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தினை பற்றி யோசிக்க வேண்டும். கோபம், குரோதமின்றி நன்றாக வாழ வேண்டும். அதுதான் தேவை. உங்கள் எல்லோரின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்’ என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கில் இராணுவக் குறைப்பிற்கு கால வரையறை வேண்டும் – முதலமைச்சர்

தெல்லிப்பழை புற்று நோய் வைத்தியசாலை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

தீர்வைப் பெற தமிழ் பிரதிநிதிகள் முன்வரவேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

Related Posts