‘ஒரு சமூகத்தின் குரலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திகழ்கின்றார். எ இந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக வருவதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு சகல தகுதிகளும் உண்டு என்பதை பெருமையுடன் நான் கூறிக்கொள்கின்றேன்’ இவ்வாறு சமுர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
பட்டிப்பளை பிரதேசத்தில் வறுமை கோட்டுக்கு கீழுள்ள யுவதிகளுக்காக நடத்தப்பட்ட கைப்பணி மற்றும் அழக்குக்கலை பயிற்சியை பூர்த்திசெய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் புதன்கிழமை (01) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
‘இரு சமூகங்களும் ஒற்றுமைப்படும் நோக்கில் தமது எதிர்கால அரசியல் பயணங்களை மேற்கொள்ளும்போது, சமூகத்துக்கு ஒரு விடிவை ஓர் எதிர்காலத்தை பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசியலில் எதிர் பங்காளிகளாக இருந்துகொண்டு சத்தம் போடுவதால், எதையும் சாதிக்கமுடியாது.
அரசியல் பங்காளிகளாக இருந்தால் மாத்திரமே, மக்களுடைய தேவைகள், பிரச்சினைகளை ஓரளவுக்காவது தெரிந்துகொள்ளக்கூடிய வல்லமையை பெறமுடியும் என்ற உண்மையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாணசபையில் இப்போதாவது படித்திருக்கின்றார்கள் என்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
ஏனெனில், தேவைப்பட்ட சமூகங்களும் தேவையுள்ள சமூகங்களும் அதிகமாக இருக்கின்ற காலப்பகுதியில் வெறுமனே வெட்டிப்பேச்சும் வீர வசனங்களும் பேசிக்கொண்டிருப்பதால் மாத்திரம், மக்களுடைய துன்பங்களை போக்கமுடியாது என்ற உண்மையை அந்தக் கட்சி விளங்கிக்கொண்டதன் காரணமாக, கிழக்கு மாகாணசபையில் பங்காளிக்கட்சிகளுடன் சேர்ந்து அமைச்சு பதவிகளை பெற்று மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்துள்ளார்கள். இந்த நினைப்பு வருகின்ற பொதுத்தேர்தலிலும் நியாயபூர்வமான உணர்வுகளுடன் இந்தத் தேசியத்தில் அரசின் பங்காளிகளாக நின்று மக்களுக்கு சேவை செய்கின்ற பணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு ஆகும்’ என்றார்.