எண்ணெய் கசிவு விவகாரம்; 8 பேர் உண்ணாவிரதம்

வலிகாமம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தொடர்பில் வடமாகாண சபையின் நிபுணர் குழு அறிக்கையின் விளக்கத்தை எழுத்துமூலம் தருமாறு கோரி நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் 8 பேர் சாகும்வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

waterprotest-05

அறிக்கையில் கூறப்பட்டதன் பிரகாரம் நீரில் நச்சுப்பதார்த்தங்கள் இல்லையென்றால் அந்நீரை பொதுமக்கள் பருகலாமா என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என்பது அவர்களது பிரதான கோரிக்கையாகவிருக்கின்றது.

பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் நீர், குடிநீர் பயன்பாட்டுக்கு உகந்ததா இல்லையா?, தூய நீருக்கான விசேட செயலணியானது வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிகார, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரின் கூட்டுத்தலைமையின் கீழ் ஒருங்கமைக்கப்படவேண்டும், மின் உற்பத்தி நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட ஒயில் மற்றும் கிறீஸ் கழிவுகளை அகற்றி எமது நீரை நாமே பயன்படுத்தக்கூடியதாக குறுகிய, இடைத்தர, நிரந்தர தீர்வை வழங்குவதற்கான திட்டங்களை வகுத்து அவற்றை சிறப்பாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்துள்ளனர்.

அத்துடன், தற்காலிகமாக வழங்கப்படும் குடிநீரினது தர உறுதிப்பாடு, சீரான வழங்கல், நீர் பெறப்படும் மூலம் தொடர்பில் பொருத்தமான அதிகாரிகளின் உறுதிப்படுத்தலும் மேற்பார்வையும் இருத்தல் வேண்டும், இந்தப் பாரிய அனர்த்தம் ஏற்பட காரணமாகவிருந்தவர்களுக்கும், தங்கள் கடமைகளை சரிவர செய்யத் தவறியவர்களுக்கும் எதிராக மத்திய மற்றும் மாகாண அரசு மட்டங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும், இவ் விடயங்களை வெளிக்கொணரும் அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் போன்றோர் மீது ஏற்படுத்தப்படும் மறைமுக அழுத்தங்கள், பழிவாங்கல்கள் என்பன ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துதல் வேண்டும் என்ற கோரிக்கைகளையும் இவர்கள் முன்வைத்துள்ளனர்.

மேலும், மீள் ஒருங்கமைக்கப்படும் செயலணியானது இவ்விடயம் தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் (WHO) பேன்ற துறைசார்ந்த நிறுவனங்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவேண்டும், நிபுணர் குழுவின் குறைபாடுகள் நீக்கப்பட்டு மீளமைப்புச் செய்யப்பட வேண்டும், மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பொருட்டு மீள் ஒருங்கமைக்கப்படும் செயலணியின் செயற்பாடுகள் பற்றி வாராவாரம் மக்களுக்கு தெரியப்படுத்துதல் வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை உண்ணாவிரதக்காரர்கள் முன்வைத்துள்ளனர்.

தங்கள் கோரிக்கைகள் எழுத்துமூலம் உறுதிப்படுத்தும் வரையில் தங்கள் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர்கள் கூறினர்.

Related Posts