Ad Widget

எங்களை அடித்து உதைத்து எதிர்கட்சிக்கு போங்கள் என்று கூறினாலும் நாங்கள் போகமாட்டோம் – சிவாஜிங்கம்

தமிழரசு கட்சி எங்களை அடித்து உதைத்து எதிர்கட்சிக்கு போங்கள் என்று கூறினாலும் நாங்கள் போகமாட்டோம் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் தெரிவித்தார்.

யாழில் உள்ள விடுதி ஒன்றில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலையே அவர் இதனை தெரிவித்தார்.

plote-press-meet

யாழில் நேற்று நடைபெற்ற வடமாகாண சபை உறுப்பினர்களின் சத்தியபிரமாண நிகழ்வை புறக்கணித்தமை தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையிலையே இந்த ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ஈ.பி.ர்.எல்.எப்., ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் அக் கட்சிகளின் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமசந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும், தற்போதைய வடமாகாண சபை உறுப்பினர்களுமான சிவாஜிங்கம், சித்தார்த்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,

தமிழரசு கட்சி தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து வருகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலையே நாம் நேற்றைய நிகழ்வில் பங்கு பற்றவில்லை.

மற்றைய மாகாணசபை செயற்பாடுகளில் எமது ஒற்றுமையை வழங்குவோம். ஆனால் நேற்று அந்த எதிர்ப்பை நாங்கள் கட்டி இருக்காவிட்டால் அவர்கள் செய்வது எல்லாம் சரி என்று ஆகிவிடும் என தெரிவித்தார்.

சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கையில்,

நாங்கள் பதவியை தேடிபோறவர்கள் அல்ல. தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக உழைப்பவர்கள். தமிழ் மக்கள் எங்களுக்கு தந்த ஆணையை மதிக்கின்றோம்.

இன்று ராஜதந்திர போராட்டம் பற்றி பேசுகின்றோம். நாம் இழந்த இழப்புக்கள், போராளிகளின் தியாகங்கள் என்பவற்றாலேயே நாம் அதைப்பற்றி பேசுகின்றோம்.

எமது அடுத்த கட்ட போராட்டம் ராஜ தந்திர போராட்டம். அதனை சர்வதேச உதவியுடனே நாம் செய்ய வேண்டும்.

நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட இலக்கை நோக்கி செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருப்போம். அது தவறும் பட்சத்தில் நாம் மக்களுக்கு உண்மையை கூறுவோம்.

நாம் யாருக்கும் விலை போகமாட்டோம். யாரும் யாருக்கும் விலை போனால் அதை நாம் தட்டி கேட்போம் என்பதை மக்கள் நம்ப வேண்டும்.

ஒரு ஜனநாயக ரீதியான கூட்டமைப்பே சரியான பாதையில் செல்ல முடியும். எனவே ஜனநாயக ரீதியான கூட்டமைப்பே மிக மிக முக்கியம் என தெரிவித்தார்.

சித்தார்த்தன் கருத்து தெரிவிக்கையில்,

நாம் மாகாண சபையை முடக்கவோ பகிஸ்கரிக்கவோ போவதில்லை.

நாம் வடக்கு மாகாண சபையை தனியே மாகாண சபையாக பார்க்கவில்லை. ஒத்து மொத்த தமிழ் மக்களின் தீர்வுக்கான புள்ளியாகவே பார்க்கின்றோம்.

நடந்தவை நடந்தவையாக இருக்க. நடக்க போவது நல்லதாக நடக்க வேண்டும் என்ற ரீதியில் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட்டு முடிவெடுக்க வேண்டும்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டதை அடைய அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். மக்கள் தங்கள் ஒற்றுமையை காட்டி உள்ளார்கள். நாம் அவர்களுக்கு எமது ஒற்றுமையை காட்ட வேண்டும் என தெரிவித்தார்.

முதலமைச்சர் வேட்பாளர் தெரிவிலும், முதலமைச்சர் ஜனாதிபதியின் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்வது என்ற முடிவுலும் சர்ச்சைகள் இருந்தபோது அப்போது பகிரங்கமாக எதிர்க்காத நீங்கள் தற்போது ஏன் தமிழரசு கட்சி தன்னிச்சையாக முடிவெடுக்கின்றது என எதிர்க்கின்றீர்களே என ஊடகவியலாளர்கள் கேட்டபோது,

அந்த முடிவுகளுக்கு நாம் எமது பலமான எதிர்ப்புக்களை தெரிவித்து கொண்டே வந்தோம். ஒவ்வொரு கூட்டங்களிலும் எமது கடுமையான எதிர்ப்புக்களை தெரிவித்தோம். அது எதனையும் இவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை. ஆனால் அந்த எதிர்ப்புக்களை நாம் பகிரங்கபடுத்தவில்லை. அவர்கள் அவ்வாறு தொடர்ந்து தன்னிசையாக முடிவெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே நாம் நேற்றைய நிகழ்வில் பங்கு பற்றவில்லை என தெரிவித்தனர்.

Related Posts