Ad Widget

ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் கொலை: சகோதரர்கள் இருவரும் பிணையில் விடுவிப்பு!!

ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கில் சுமார் 17 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டடிருந்த சந்தேகநபர்கள் இருவரையும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது.

ஊர்காவற்துறை பகுதியில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) என்பவர் கொலை செய்யபட்டார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் சகோதர்களான இருவர் அன்றைய தினம் மாலை மண்டைதீவு சந்தியில் உள்ள ஊர்காவற்றுறை பொலிஸாரின் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரும் அன்றைய தினத்திலிருந்து சுமார் 17 மாதங்களாகத் தொடர்ச்சியாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்களுக்கு பிணை கோரி அவர்களின் தாயார், சட்டத்தரணி வி.திருக்குமரன் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்தார்.

பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், சந்தேகநபர்கள் இருவருக்கும் நிபந்தனையுடனான பிணை வழங்கி இன்று கட்டளை வழங்கினார்.

“ சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் ஒரு இலட்சம் ரூபா பணத்தை வைப்புச் செய்யவேண்டும். சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் 5 இலட்சம் பெறுமதியான இரண்டு ஆள் பிணைகளை நீதிமன்றில் முன்னிறுத்தவேண்டும். மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் காலை 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும். வெளிநாடு செல்லத் தடை” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளை வழங்கினார்.

Related Posts