Ad Widget

ஊர்காவற்துறையில் இரண்டு கோடி ரூபா செலவில் நண்டு பதனிடும் தொழிற்சாலை

ஊர்காவற்துறை தம்பாட்டியில் ரூபா இரண்டு கோடி முப்பது இலட்சம் ரூபா செலவில் நண்டு பதனிடும் தொழிற்சாலை நேற்று முன்தினம் புதன்கிழமை (08.04.2015) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் நோர்வே நாட்டின் நிதிப்பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலை, தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சுவையும் போசாக்கு மிக்கதுமான நண்டுக்கு சர்வதேச அளவில் பெரும் சந்தை வாய்ப்பு உள்ளது. ஆனால், உரிய பதனிடும் வசதி இல்லாததால் குடாநாட்டில் பிடிக்கப்படும் நண்டுகள் உள்ளூர் மக்களினாலேயே நுகரப்பட்டு வருகிறது. இதனைக் கருத்திற்கொண்டு நண்டுகளை ஏற்றுமதி செய்யும் நோக்கிலேயே இந்நண்டு பதனிடும் தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது. தீவகக் கடற்பரப்புகளில் மாத்திரம் அல்லாமல் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் பிடிக்கப்படும் நண்டுகளையும் தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் கொள்வனவு செய்து இத்தொழிற்சாலையில் பதனிடவுள்ளது. இதன் பின்னர் பதனிடப்பட்ட நண்டுகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டு தகரக் கொள்கலன்களில் அடைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். நண்டு ஏற்றுமதியின் மூலம் நாட்டுக்கு அன்னியச் செலவாணியை ஈட்டித்தருவதோடு, தம்பாட்டி கிராமத்தில் உள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் இத்தொழிற்சாலை வழங்க உள்ளதாகதம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நவீன வசிதிகளுடன்கூடிய இந்நண்டு பதனிடும் தொழிற்சாலையை இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் கிரற் லோஹீன், ஐக்கியநாடுகள் சபையின் உதவிச் செயலாளர்நாயகமும்,ஐக்கியநாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் உயர் நிர்வாக அதிகாரியுமான ஹோலியாங் சூ, ஐக்கியநாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினை நந்தி மற்றும் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்துள்ளனர்.

இத்தொழிற்சாலை அமைந்துள்ள ஏழு நெல்பரப்புக் காணியையும் அமரர் பொன்னுச்சாமி குமாரசாமி என்பவரின் ஞாபகார்த்தமாக அவரது குடும்ப உறவினர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

Related Posts