Ad Widget

ஊடகவியலாளர் பயிற்சிப் பட்டறை

யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை இலங்கை பத்திரிகைப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை (20) ஆரம்பமாகியது.

இந்நிகழ்வு போரின் போது இறந்த படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமாகியது.

1(5991)

யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி பயிற்சிப் பட்டறையில், இலங்கையின் அபிவிருத்தியில் ஊடகவியலாளர்கள் எவ்வாறான பங்களிப்பினை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பிலான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இப் பயிற்சிப்பட்டறையில், தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.தில்லைநாதன், இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான பேராசிரியர் சுனந்த மஹேந்திர, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொடர்பாடல் பிரிவின் கலாநிதி சுவாமிநாதன் விமல், உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்கள்.

இந்தச் செயலமர்வில் யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக ஊடகவியற்துறை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் உரையாற்றுகையில்…

யாழ். மாவட்ட ஊடகங்கள் உரிய தகவல்களை உரிய முறையில் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதில் அதிக அக்கறை எடுத்து செயல்படுகின்றன.

நான் மட்டக்களப்பில் அரசாங்க அதிபராக இருந்த வேளையில் இலங்கை பத்திரிகைப் பேரவையினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்துகொண்டேன்.

தற்போது இரண்டாம் தடவையாக யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்துகொள்கின்றமை மகிழ்ச்சியானதாகவுள்ளது.

நவீன உலகில் ஊடகத்துறையின் வளர்ச்சி ஊடாக எதனையும் நன்கு அறிந்து செயல்படக் கூடிய சந்தர்ப்பங்கள் தற்போது காணப்படுகின்றன. யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான இந்தப் பயிற்சிப்பட்டறை யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களை மேலும் வளப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

எங்களுடைய பணிகள் மேலும் அபிவிருத்தி அடையவும் மக்களுக்கான விபரங்களை எடுத்துக்கூறுவதிலும் இது நல்லதொரு வழிகாட்டியாகவும் பயனுடையதாகவும் அமையும். இதனை ஊடகவியலாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Related Posts