Ad Widget

ஊடகவியலாளர்கள், மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு சுதந்திர ஊடகக் குரல் கண்டனம்

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள சுதந்திர ஊடகக் குரல் இந்த நடவடிக்கை ஐனநாயக விரோத நடவடிக்கையாகும் என்று தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகக் குரலின் செயலாளர் கு.டிலீப்அமுதன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டித்தும், பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். இது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான அடக்கு முறையும் ஊடகங்கள் மீதான அடக்குமுறையாகும். இவ்வாறான நடவடிக்கைகள் மக்கள் போராட்டத்துக்கே வித்திடும்.

ஐனநாயகத்தை நிலை நிறுத்துவதற்கான முக்கிய தூணாகக் கருதப்படுவது ஊடகங்களாகும். ஊடக சுதந்திரம் எப்போதும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். மக்கள் குரலாக ஒலிப்பதோடு, முக்கியமாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் ஊடகங்கள் இருக்கிறன.

ஒரு ஐனநாயக நாட்டில் கருத்து வெளிப்பாட்டுக்கான சுதந்திரம் உண்டு. வன்முறையற்ற அமைதி வழியிலான கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கும் எந்தவொரு மக்கள் ஆட்சி நாட்டிலும் தடை விதிக்கப்படுவதில்லை. அமைதி வழி கருத்து வெளிப்பாட்டுக்கு இலங்கையில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உரிமையிருக்கிறது. அதற்கான வாய்ப்பளிக்கப்பட வேண்டியது அவசியமானதும் கட்டாயமானதுமாகும்.

இந்தவொரு சூழலில் நவம்பர் 27 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அமைதி வழியில் நடத்திய கருத்து வெளிப்பாட்டை இராணுவ மற்றும் பொலிஸ் அடக்க முற்பட்டது. இது ஐனநாயக நாட்டில் குறிப்பாக மக்கள் ஆட்சி நாட்டில் ஐனநாயக விரோத நடவடிக்கையாகும். இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அதேவேளை அன்றைய தினம் பல்கலைக்கழக விடுதியில் நடைபெற்ற சம்பவங்களை அறிக்கையிடுவதற்காக அங்கு சென்றிருந்த பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதோடு தாக்குதலுக்கும் உள்ளானார்கள். இது கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாதும். இந்தச் சம்பவத்தை படம் பிடித்துக் கொண்டிருந்த உதயன் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கான அச்சுறுத்தலாகும்.

உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞா. குகநாதன் தாக்கப்பட்டு ஒரு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் உதயன் பத்திரிகையின் மற்றுமொரு பத்திரிகையாளர் தாக்கப்பட்டிருப்பது ஊடகவியலாளர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக இலங்கையில் நடவடிக்கை எடுக்கப்படாமை இவ்வாறான செயற்பாடுகளை மேலும் ஊக்கப்படுத்தி அதிகரிக்கச் செய்கிறது. ஊடகத்துறையை மௌனிப்பதற்கான தொடர் திட்டமிடலாகவே இவற்றைப் பார்க்க முடியும். இதனை அனைத்து சிவில் சமூக அமைப்புக்களுடன் சேர்ந்து நாமும் கண்டிக்கின்றோம்.

இந்த நிலையிலிருந்து மக்கள் குரலுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக ஒன்றிணையவும் குரல் கொடுக்கவும் முனைகிறோம்.

மேலும், நவம்பர் 28 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் அமைதிவழியில் நடத்தப்பட்ட ஊர்வலத்தை பொலிஸார் தடியடி நடத்தி தடுக்க முற்பட்டதையும், அதனை அறிக்கையிடுவதற்காக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் கண்மூடித்தனமாக தாக்கி காயப்படுத்தியதும், இலங்கையில் ஊடக சுதந்திரம் இல்லையென்பதை தெளிவாக்கியிருக்கிறது.

ஊடகவியலாளர்களை காப்பாற்றுவதற்கு அனைத்து ஊடக நிறுவனங்களும் சிவில் சமூக அமைப்புக்களும் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறான அடக்கு முறைக்கெதிராக மக்கள் போராட்டங்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அப்போது தான் ஒரு நாட்டின் மக்களாட்சி நிலைத்திருக்க வாய்ப்பேற்படும்.

Related Posts