Ad Widget

ஊடகவியலாளர்களை அவதூறாகப் பேசிய வடமாகாண சபை உறுப்பினருக்கெதிராக கண்டன அறிக்கை!

ஒரு சில நாட்களுக்குமுன்னர் வடக்கு மாகாணசபையின் 53ஆவது அமர்வு நடந்துகொண்டிருந்த வேளையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவர் யாழிலிருந்து வெளிவரும் ஊடவியலாளர்களையும், ஊடகங்களையும் அவதூறாகப் பேசியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் யாழ். ஊடக அமையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஜனநாயகத்தின் 4 அவது தூணான ஊடகத்துறை கடந்த 3 தசாப்தங்களில் 41 தமிழ் ஊடகவியலாளர்களை வடகிழக்குமாகாணங்களில் ஊடகப்பணிக்காக பலி கொடுத்திருக்கின்றது.

மேலும் பல ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்கள் காணாமல்போயிருக்கின்றார்கள். மேலும் பலர் சொந்த நாட்டில் வாழ முடியாத நிலையில் நாட்டை விட்டே வெளியேறி புலம்பெயர் நாடுகளில் ஏதிலிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக தமிழ்தேசிய போராட்டம் அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் முன்னெடுக்கப் பட்டபோது அரசியல் தரப்புக்களுக்கு ஊடாக மக்களுடன் நின்று அவர்களை வழிப்படுத்தியதில் தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆற்றிய பணி சொல்லித் தெரியவேண்டியதல்ல.

மிக நம்பிக்கையுடன் எதிர்பார்க்கபட்ட வடமாகாணசபை தேர்தலிலும் சரி அதன் பின்னராக தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியை கைப்பற்றியபோதும் சரி மக்களிடையே மிகுந்த நம்பிக்கையினை தோற்றுவிப்பதில் இதே ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருந்தார்கள்.

இந்நிலையில் தகவல் அறியும் உரிமைக்காக தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் வடமாகாணசபையில் எதிர்கொண்டிருக்கும் சேறு பூசல்கள் மிக மோசமான மன உளைச்சலை தருவதாக அமைந்திருக்கின்றது. போரின் பின்னதாக மக்களது அன்றாட வாழ்வினை கட்டியெழுப்பவேண்டிய தார்மீக கடமை வடமாகாணசபைக்கு இருக் கின்றபோதும் அவ்வாறு நடக்கின்றதா? என்பதை கண்காணிக்கவேண்டிய காவல் நாய்களாக ஊடகங்களே இருக்கின்றன. அந்த வகையில் ஊடகங்களின் அறிக்கையிடல் என்பது தனிநபர் நலன் சார்ந்ததாக என்றுமே இருக்கப்போவதில்லை.

போர்க்காலத்தில் சக ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களை காவு கொடுத்து ஊடகப்பணியாற்றுவதென்பது ஒரு அர்ப்பணிப்பு மிக்க தொழில் என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.

குறிப்பாக புதிதாக ஊடகத்துறைக்கு இளம் சமூகம் வர அச்சம் கொண்டிருக்கும் இந்த சூழலில் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற வடமாகாணசபையின் 53 ஆம் அமர்வில் ஊடகவியலாளர்களை தனிப்பட்டரீதியில் தாக்கியும் ஊடக நிறுவனங்களுக்கு வர்ணம் பூசியும் வெளியிடப்பட்ட கருத்துக்கள் வன்மையான கண்டனத்திற்குரியவை. ஊடக அறிக்கையிடுதல் என்பது சொல்வதனை கேட்டு அப்படியே எழுதுவதல்ல அது பல பரிமாணங்களை கொண்டது.

ஒவ்வொரு ஊடகவியலாளர்களும் வெவ்வேறு பரிமாணங்களில், மக்களது வாக்குகளை பெற்று தெரிவாகி அதே மக்களது வரிப்பணத்தில் சலுகைகளை பெற்றுக்கொண்டிருக்கும். மாகாணசபையின் முதலமைச்சர், அமைச்சரவை மற்றும் உறுப்பினர்களென அனைத்து தரப்புக்களையும் காண்காணிப்பதும் அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு உண்மைகளை சொல்வதும் ஊடகவியலாளர்களது கடமையாகும்.

ஊடகம் ஒன்றில் அறிக்கையிடப்பட்ட செய்தி தொடர்பில் தமது மறுப்புக்களை தெரிவிக்கவோ தமது நியாயப்பாட்டை தெரியப்படுத்தி நியாயம் பெற்றுக் கொள்ளவோ பல வழிகள் இருக்கின்றன. அதனை விடுத்து வெறுமனே 3 மணி நேரம் கும்பலோடு கும்பலாக சேறு பூசுவது நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும்.தமக்கெதிரான செய்திகளை அறிக்கையிடுவதாக கருதும் ஊடகங்களை தடைசெய்யக்கோருவது அவர்களது அறிவீனத்தையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

அண்மைக்காலமாக மீண்டும் ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் தமிழ்தேசியத்தின் பெயரால் அரசியல் செய்வோர். கெடுபிடிகளை திணித்து வருகின்றமை கவலையை தோற்றுவிக்கின்றது. மேலும் அழுத்தங்கள் ஊடாக ஊடகவியலாளர்களையும் ஊடகங்களையும் அடிபணிய வைப்பதென்பது முன்னைய ஆட்சியாளர்கள் காலத்தில் ஊடக சுதந்திரத்திற்காக போராடிய நாம் மீண்டும் அதே பாதைக்கு செல்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றதாவென்ற சந்தேகத்தை எழுப்புகின்றது.

இத்தகைய ஆரோக்கியமற்ற சமகால அரசியல் போக்கில் வடமாகாணசபையின் அமர்வுகளை அறிக்கையிடுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் பணியாற்ற வேண்டுமா? என்ற கேள்வியும் இப்பொழுது எழுகின்றது.

வடமாகாணசபையின் 53 ஆம் அமர்வில் ஊடக நிறுவனங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் இடம்பெற்ற சேறு பூசும் நடவடிக்கைகளை யாழ்.ஊடக அமையம் வன்மையாக கண்டிப்பதுடன் ஜனநாயகத்தின் 4 ஆவது தூணான ஊடகத்துறையை வலுப்படுத்த அனைவரையும் கைகோர்க்க அழைப்பும் விடுகின்றது என யாழ். ஊடக அமையம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

1

2

Related Posts