Ad Widget

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் எத்தகைய இழிசெயல்களாலும் உண்மைகளை ஒருபோதும் உறங்கவைக்க முடியாது -பொ.ஐங்கரநேசன்

ayngaranesan (1)ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையிலும், அவமானப்படுத்தும் வகையிலும் எத்தகைய இழிசெயல்களை எவர் மேற்கொண்டாலும் உண்மைகளை ஒருபோதும் உறங்கவைக்க முடியாது என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார்.

ஓமந்தையில் நேற்று வெள்ளிக்கிழமை (25.07.2014) தமிழ் ஊடகவியலாளர்கள் சிலரைக் கஞ்சா கடத்தியதாகக் கூறி வழக்கில் சிக்க வைப்பதற்குப் படையினர் முயன்றது தொடர்பாக ஊடகங்களுக்கு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் விடுத்திருக்கும் கண்டனச் செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்திக் குறிப்பில்,

‘கொழும்பில் நடைபெறவுள்ள ஊடகப் பயிற்சிநெறியொன்றில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்துக்கொண்டிருந்தபோது வாகனத்தை ஓமந்தை சோதனைச்சாவடியில் வழிமறித்த படையினர், வாகனத்துக்குள் கஞ்சா அடங்கிய சிகரெட் பெட்டி ஒன்றை வைத்துவிட்டு நாங்கள் கஞ்சா கடத்தியதாக ஈனத்தனமான நாடகம் ஒன்றை அரங்கேற்றியுள்ளனர்’ என்று ஊடகவியலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஊடகவியலாளர்கள் ஓமந்தை காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட போது அவர்கள் காட்டிய எதிர்ப்பின் காரணமாகப் பின்னர் விடுவிக்கப்பட்டாலும், சாரதி கஞ்சா வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மக்களின் தேசியவிடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை, தமிழ் மக்கள்மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இனரீதியான ஒடுக்குமுறைகளை, ஈவிரக்கமற்ற இராணுவ நடவடிக்கைகளை, நில அபகரிப்பை உடனுக்குடன் சர்வதேசமெங்கும் அறியச் செய்வதால் இலங்கை அரசாங்கம் அஞ்சி நடுங்கும் பேராயுதமாக இன்று இருப்பது ஊடகங்களும் நெஞ்சுரம்மிக்க ஊடகவியலாளர்களும்தான். தமிழ் மக்களது இன்றைய பெரும் பலமும் இவர்கள்தான்.

இதனால்தான் ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். ஊடகங்கள்மீதும், ஊடகவியலாளர்கள்மீதும் தாக்குதல் மேற்கொள்ளுவதும் சேறு பூசுகின்ற நிகழ்ச்சிகளும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுவருகின்றன. இதன் ஒரு கட்டமாகவே, ஊடகவியலாளர்களின் ஆன்மாவைப் படுகொலை செய்யும் நோக்கில் போதைப் பொருள் வழக்கிலும் அவர்களைச் சிக்கவைக்கும் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையிலும் சமூகத்தில் அவர்களது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி அவமானப்படுத்தும் வகையிலும் எத்தகைய இழிசெயல்களை எவர் மேற்கொண்டாலும் உண்மைகளை ஒருபோதும் உறங்கவைக்க முடியாது. முள்ளிவாய்க்காலில் இராணுவத்தரப்பால் எடுக்கப்பட்ட புகைப்படங்களே இன்று அவர்களுக்கு எதிரான போர்க்குற்ற ஆதாரங்களாக, தமிழினப் படுகொலையின் சாட்சியங்களாக ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருப்பது உண்மைகளை அசுரப்பலம் கொண்டும்கூட மூடிமறைக்க முடியாது என்பதற்கு ஒரு வலுவான உதாரணம் ஆகும்.

ஊடகங்கள்மீதும் ஊடகவியலாளர்கள்மீதும் மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, ஜனநாயக ஊடகக் குரலை ஒடுக்க முற்படுவோர்களுக்கு எதிராக இன, மொழி பேதங்களைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts