Ad Widget

ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபி வரலாற்றுப் பொக்கிஷமாக பாதுகாக்கப்படும்: ஆனோல்ட்

தமிழ்த் தேசத்தின் குரலாக ஒலிக்கும் ஊடகப் போராளிகளின் நினைவாக யாழில் அமைந்துள்ள நினைவுத் தூபி வரலாற்றுப் வரலாற்றுப் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுமென யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்தார்.

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தில் யாழ்.பிரதான வீதியில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியின் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “ பேனாமுனை போராளிகளாக, அடக்குமுறைக்கு எதிரான மக்களின் குரலாக, கொலைகள், அநியாயங்களுக்கு எதிராகவும் தங்களுடைய பேனா மைகளினால் ஏழுதிய ஊடகப் போராளிகள் பலர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வுலகத்தில் எத்தனையோ விதமான போர்கள், குழச் சண்டைகளுக்குள் துண்ப துயரங்களுக்கு மத்தியில் உண்மையை உலகிற்கு எடுத்துக் காட்டிய ஜனநாயக வாதிகள் ஊடகவியலாளர்களே.

இந்த ஜனநாயக வாதிகள் கொல்லப்பட்டமையை நினை கூர்வதற்கு இலங்கையில் வேறு எங்கும் இல்லாத வகையில் யாழ்.மாநகரத்தின் மத்தியிலே ஒரு நினைவு தூபி அமைக்கப்பட்டிருப்பது யாழ்.மாவட்டத்திற்கே பெருமை சேர்க்கும்.

இறுக்கமான சூழலில் ஊடகவியலாளர்கள் பல்வேறு களங்களைக் கண்டவர்கள். ஒவ்வொரு ஊடக போராளிகளும் எவ்வாறு தங்களது தற்துணிவோடும், உண்மையை உலகிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடும் இரண்டிற்கு மேற்பட்ட குழுமங்களுக்கு மத்தியில் நின்று போராடி பணியாற்றியவர்கள்.

யாழ்.பல்கலைக்கழகத்திலே முதன்முறையாக பொங்கு தமிழ் என்ற நிகழ்வினை நடத்திய போது, ஊடகப் போராளிகள் எவ்வாறு பயங்கரமான சூழலிலும் மாணவர்களோடு இணைந்து பயணித்திருந்தார்கள். இதன் பின்னர்தான் ஊடகவியலாளர் நிமலராஜன் கொடுரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

நிமலராஜனின் கொலையை கண்டித்து யாழ்.மாவட்டச் செயலகம்வரை அமைதிப் பேரணியாக சென்று அறிக்கை ஒன்றினையும் கையளித்திருந்தோம். இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் ஊடகவியலாளருக்காக யாழ்.பல்கலைக்கழக சமூகம் அன்று களமிறங்கியது.

இன்றுவரை யாழ்.பல்கலைக்கழகம் தேசியத்திற்கான உணர்வினை வெளிப்படுத்தி நிற்பதற்கும் ஊடகவியலாளர்களே காரணமாக உள்ளார்கள்.

யாழ்.நகர மத்தியிலே அமைந்துள்ள கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபி நகர மயமாக்கலின் பின்னரும் அதே மையத்தில் அமைந்திருக்கும். புதுக் பொலிவு பெற்று வரலாற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அத்தூபி கருதப்பட்டு, யாழ்.மாநகர சபையினால் பாதுகாக்கப்படும்” என்றார்.

Related Posts