Ad Widget

ஊடகங்கள் மீது சட்டத்தரணிகள் பாய்ச்சல்

ஊடகங்கள் நீதித்துறையில் தலையீடுகள் செய்கின்ற போக்கு காணப்படுகின்றது. நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காது, எவராவது சொல்வதைக் கேட்டு நீதிமன்ற செய்திகளை சில ஊடகங்கள் வெளியிடுகின்ற என வரணி மாணவி துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணிகள் கூறினர்.

வரணிப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 12 வயது மாணவியை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தில், நீதவான் ஸ்ரீ நிதி நந்தசேகரன் முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே சட்டத்தரணிகள் இவ்வாறு கூறினர்.

“நீதிமன்றம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகின்றன. ஊடகவியலாளர்கள், நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காமல், தொலைபேசியில் செய்திகளை எடுக்கின்றனர். இதனால் பிழையான செய்திகள் வெளியிடப்படுகின்றன.

அத்துடன், நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் சந்தேகநபர் ஆவார். அவரைக் குற்றவாளி என்ற கோணத்தில் சில இணையத்தளங்கள் செய்தி வெளியிடுகின்றன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியரைப் பற்றி இணையத்தளம் ஒன்றில் புகைப்படங்களுடன் அவதூறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவருக்கும் இந்தக் குற்றச்சாட்;டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கூட்டம் ஒன்றை நடத்தி கலந்துரையாடினர் என்று கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வாறு என்றால் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். இதனால் அவருடைய, உறவினர்கள், நண்பர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும், அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாகவுள்ளார். இணையத்தள செய்தியால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான இணையத்தளங்களை இப்படியே விடமுடியாது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சட்டத்தரணிகள் கூறினர்.

இதையடுத்து, “இணையத்தளங்கள் தொடர்பான விடயம் கருத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்” என நீதவான் கூறினார்.

Related Posts