Ad Widget

உள்ளூராட்சி ஆணையாளருக்கு கொலை அச்சுறுத்தல்

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.ஜெகூவுக்கு உள்ளூராட்சி அமைச்சின் அலுவலகத்தில் பணியாற்றும் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி முகாமைத்துவ உதவியாளர், கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 2012ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி வரையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.

இக்காலப்பகுதியில், இடம்பெற்ற சட்டவிரோத மணல் விற்பனை, உழவு இயந்திர கொள்வனவு மோசடி, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி மோசடி என 11 குற்றச்சாட்டுக்கள் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டு உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. விசாரணைக் காலத்தின் போது இவர் கடமைக்கு செல்வதை தவிர்த்து வந்ததால் செயலாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.

தொடர்ந்து 2013ஆம் ஆண்டில் மாகாண பொதுச் சேவை ஆணையாளரினால், உள்ளூராட்சி அமைச்சின் அலுவலகத்தில் இவர் பணிக்கு அமர்த்தப்பட்டார். இத்தருணத்தில் அவர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகம், அது தொடர்பான ஆரம்ப புலன் விசாரணை அறிக்கை மற்றும் குற்றச்சாட்டு பத்திரம் ஆகியவற்றறை ஒழுக்காற்று அதிகாரிக்கு அனுப்பியிருந்தது.

இந்த அறிக்கை அனுப்பப்பட்டதை அடுத்தே, குறித்த முகாமைத்துவ உதவியாளரினால் ஆணையாளருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ‘வீடு புகுந்து அடிப்பேன்’ என்றும் ‘கொலை செய்வேன்’ என்றும் அவர் தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக ஆணையாளர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன், இது தொடர்பில் வடமாகாண ஆளுநர் எச்.என்.ஜி.எஸ் பளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு தலைவர், மாகாண பிரதம செயலாளர் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் ஜெகூ தெரியப்படுத்தியுள்ளார்.

Related Posts