Ad Widget

உள்ளாடைகளுடன் அலையும் முறிகண்டிப் பொலிஸார்!!

உள்ளாடைகளுடன் முறிகண்டிக் காவலரண் பொலிஸார் அலைவதாகவும், அவர்கள் பாதுகாப்புப் பணியில் முழுமையாக ஈடுபடுவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த காவல் அரண் மாங்குளம் தலைமை பொலிஸ் நிலையத்தின் கீழ் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகக் கடந்த 2021 ஆம் டிசெம்பர் மாதம் 28 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மக்கள் முறைப்பாடுகள் செய்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பொது மகன் ஒருவர் சேவையைப் பெறுவதற்காகக் குறித்த காவலரணிற்குச் சென்ற போது அங்கு எவரும் காணப்படவில்லை எனவும், சிறிது நேரம் கழித்து சாதாரண உடையில் நீராடிவிட்டு வந்த உத்தியோகத்தர் ஒருவர் ” கடமையில் யாரும் இல்லை தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை நாடுமாறும் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து இது குறித்து கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொது மக்களுக்கு உரிய சேவை வழங்க முடியாத முறிகண்டி காவலரண் தேவையற்ற ஒன்று எனவும், இதனால் தமக்கு எவ்வித பயனும் இல்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பொலிஸ் சேவையைப் பெற்றுக்கொள்ள செல்லும் சந்தர்ப்பங்களில் அநாகரீகமான ஆடைகளுடன் நடமாடும் குறித்த உத்தியோகத்தர்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்து, பொதுமக்களுக்கு சேவை செய்யக்கூடிய உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts